நடிகன்டா

ஒரு திரைப்படம் தொடங்கும் முன்னரும் முடிந்த பின்னரும் எத்தனையோ பெயர்கள் திரையில் மின்னி மறைகின்றன. ஒருவர் பணம் போடுவார். அவர்தான் அத்தனை பேருக்கும் சம்பளம் கொடுப்பவர். ஒருவரோ இருவரோ அல்லது இன்னும் அதிகம் பேரோ கதை திரைக்கதை வசனம் என்ற துறைகளில் பணிசெய்வர். இதில் முக்கியமானவர் இயக்குநர். அடுத்தவர் இசையமைப்பாளர். இவர் இல்லையென்றால் படம் என்ன நிலையிலிருக்கும் என்று தெரியும். நடிகை/கதைநாயகி - இவர் நாயகனைச் சுற்றி வரவேண்டும், அவிழ்த்துப் போட்டு ஆட வேண்டும். நடன இயக்குநர், சண்டைப்பயிற்சியாளர், ஓளிப்பதிவாளர், எடிட்டர், எனப்பல நூறு பேர் சேர்ந்து உருவான ஒரு திரைப்படம் யாருடைய படமாக அறியப்படுகிறது ? நடிகனின்/கதைநாயகன் பெயரால். நடிகனும் இந்தத் திரைப்படத்தில் ஒரு அங்கமே தவிர அவனால் மட்டுமே அந்தத் திரைப்படம் சாத்தியப்படாது.

ஆனால் நம்மாட்கள் என்ன சொல்கிறார்கள். தலைவர் படமாம். தலைவர் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். இவர்கள் சொல்லும் தலைவர்கள் யாரார் ? ரஜினி காந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களும், அஜித்குமார், விஜய், விக்ரம், சூர்யா, போதாதென்று தனுஷ் சிம்புவையெல்லாம் தலைவா என்று அரற்றிக் கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது.

மேலே இருக்கும் நபர்களையெல்லாம் கலைஞர்கள் என்று சொல்லலாம். ஆனால் தலைவர்கள் என்று சொல்ல இவர்களுக்கு அருகதை இருக்கிறதா ? இவர்களுக்கு மட்டும் ஏனிந்த ஒளிவட்டம் தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. எல்லாம் வணிக நோக்கம்தான். இரு நடிகர்களை எதிரிகளாக அல்லது போட்டியாளர்களாக சித்தரித்து அவர்களின் அல்லக்கைகள் செய்யும்  மொட்டை அடிப்பது, சாமி கும்பிடுவது, கெடாவெட்டுவது, கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது இப்படியான அலப்பறைகளையெல்லாம் செய்திகளாக வெளியிடுகிறார்கள். நடிகர்களின் பேட்டிகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் வார இதழ்கள் வெளியிடுகின்றன. அவ்வபோது அவர்களைக் கேவலப்படுத்தியும் விமர்சனம் செய்தும் எதிர்மறையான செய்திகள் வெளியிடப்படும். நடுநிலை ஊடகங்களாம். அட்டைப் படத்தில் தங்கள் தலைவன் படம் இருந்தால் வார இதழ்கள் வாங்கும் வாசகர்கள் அதிகம். அவர்களது படம் வெளியாவது குறித்து செயற்கையான எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

படத்தில் நடிக்க ரொம்பவும் சிரமப்பட்டேன் என்பார்கள். இவர்கள் உழைப்பைப் பற்றிப் பேசியதைக் கேட்டால் உழைப்புக்குப் பேர் பெற்ற ஜப்பான்காரனே வெட்கப்படுவான். இந்த நடிகர்கள் படம் பார்ப்பது ஒரு கடமை போல் ஆகிவிடுகிறது. படம் வெளியானவுடன் விமர்சனம் என்ற பெயரில் இவர்களைப் புகழ்வதற்கென்றே ஒரு பாடு குப்பைகள் கட்டுரைகளாக மெனக்கெட்டு எழுதப்படுகின்றன. இதுவரை வெளியான படங்களிலேயே இதுதான் வரலாறு காணாத வசூல், ஒரே நாளில் இத்தனை கோடி வசூல் என்றெல்லாம் அடித்து விடுகிறார்கள். படம் நன்றாக இருந்தால் மிகையாக புகழப்படுகிறது. இல்லையென்றால் சற்றும் மனசாட்சியின்றி இழித்துரைக்கப்பட்டு நடிகர்களை நாறடிக்கிறார்கள்.

தலைவர் செமையா நடிச்சிருக்காரு என்று ஒரு வசனம் அவ்வப்போது கேட்கும். தலைவருக்கு நடிப்பதுதானய்யா வேலை, அதற்குத்தானே பல கோடிகளில் பணம் பெறுகிறார்கள். அதென்ன அரசியல்வாதிகளுக்கு நடக்கும் பாராட்டு விழாவைப் போன்றே  என்ன செய்தாலும் புகழ்வது அவரைப் பற்றி அவரே அறியாத சாதனைகளையெல்லாம் பரப்புவது.  இப்படியாக கதாநாயகன் கடவுளாக்கப்படுகிறான். தனக்குப் பிடிக்காத நடிகனின் படம் தோல்வியடைந்தால் அதற்காக எதிரி நடிகனின் ரசிகன் மகிழ்கிறான். வெற்றியடைந்தால் அதில் குறை கண்டுபிடிக்கிறான். நடிகன் உளறுவதையெல்லாம் "பஞ்ச்" என்று நிலைத்தகவலாக இட்டு வைத்துக் கொள்கிறான். தனது வாகனத்தில், கைப்பேசியில், சங்கிலியில், மணிக்கட்டில், கடிகாரத்தில் நடிகனின் படத்தை வைத்துக் கொண்டு நான் தல ஃபேன், விஜய்ணா ஃபேன் என்றெல்லாம் சொல்வதை பெருமையாகக் கருதி வாழ்கின்றனர் சிலர்.

இன்றோ திரையரங்கங்கள் முன்பு போல் நிறைவதில்லை. இரண்டு நாட்களில் அள்ளும் பணமே வசூலாகக் கருதப்படுகிறது. எத்தனையோ திரையரங்கங்கள் மூடப்பட்டு விட்டன. தயாரிப்பாளர்கள் பலர் காணாமல் போய்விட்டனர். இருப்பினும் இந்தக் கதாநாயகர்களின் வசூலுக்கு மட்டும் குறைவில்லை. இது எப்படி ? ஒருவன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தால் அவன் செலிபிரிட்டி ஆக்கப்படுவது கட்டாயம். பின்பு அவன் விளம்பரங்களில் தோன்றுவான் கோடிகளில் அள்ளுவான். இது பந்து வீச்சாளர்களுக்குப் பொருந்தாது. அது போல நடிகர்கள் நடித்து ஒரு படம் வெற்றியடைந்தால் அவர் செலிபிரிட்டி ஆக்கப்பட்டு அடுத்தடுத்த படங்களுக்கு அவரையே ஒரு இலவச விளம்பரமாக மாற்றி விடுகின்றனர். ஷாருக்கான் வகையறாக்கள் இப்போதெல்லாம் படங்கள் நடிப்பதே இல்லை. வெறும் விளம்பரம்தான் அது என்ன பொருளாக இருக்கட்டும். போதாக்குறைக்கு ரியாலிட்டி ஷோக்களில் வேறு வந்து ஓவர் ஆக்டிங் கொடுக்கிறார்கள்.

இதில் பல நடிகர்கள் தனது குடும்பத்தினர் ஏற்கெனவே புகழ் பெற்ற, அனுபவம் வாய்ந்த கதாநாயகர்களாகவோ, இயக்குநர்களாகவோ, தயாரிப்பாளர்களாகவோ இருந்திருந்தால் இன்னும் எளிது. நடிப்பதும் ஏற்கெனவே வெற்றி பெற்ற வேற்று மொழிப்படங்களாக இருக்கும். இவர்கள் தங்களது முந்தைய படங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவதையும் தமது படத்தில் வசனமாகவும் வைத்துக் கொண்டு கைதட்டல் வாங்குகின்றனர். ரசிகர்களைப்பார்த்தும் வசங்களைப் பேசுகின்றனர். ஒரு நடிகர் ஒரு படத்தில் இந்தப் பொங்கலுக்கு நமக்கு நல்ல கலெக்சன்மா என்றே வெளிப்படையாகவும் வசனம் பேசியே விட்டார்.

இப்படிப்பட்ட கதாநாயகன்கள் எப்படியெல்லாம் நடிக்கின்றனர். இவர் பொறுக்கியாக/டான்/ரௌடி - ஆக நடித்தால் பொறுக்கியே நாயகன் காவல்துறையும் இன்னபிறரும் தீயகனாகி (villain) விடுவர். இவர் காவல்துறை அதிகாரியாக நடித்தால் காவல்துறை நாயகனாகவும் பொறுக்கிகளும் பொறம்போக்குகளும் தீயகனாக இருப்பர். எத்தனை கொலை செய்தாலும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவர் நாயகனாக இருக்கும் படத்தில் தனது காதலியை வேறொருவர் காதலித்தால் அவன் தீயகன். ஆனால் இவரே இன்னொரு படத்தில் அதை செய்தால் அது தவறாகாது ஏனென்றால் அவர் நாயகன். தீயகன் பெண்ணிடம் வம்பு பண்ணினால் அதை எதிர்த்துச் சண்டை போடுவார். அதையே இவர் ரொமான்ஸ் என்ற பெயரில் அரங்கேற்றுவார். இப்படி கதாநாயகன் என்ன செய்தாலும் அது சரியே என்று ஏற்றுக் கொள்கிறோம். சரி படத்தில்தான் இப்படி நடிக்கிறார்கள். வெளியிலாவது ஒழுங்கு மரியாதையா இருக்கலாமல்லவா ? இருக்கிறார்களா ?

எல்லா பொருட்களையும் பல்லிளித்துக் கொண்டு விற்கிறார்கள் விளம்பரத்தில். வேறு பொருட்களாவது போய்த் தொலைகிறது என்று விட்டுவிடலாம். பன்றி மூத்திரம் போன்று விற்கப்படும் ஒரு மென்பான விளம்பரத்தில் நடிக்கிறார்கள். ஏன் மிகவும் பிரபலமான பிரம்மாண்டமான நிறுவனத் தயாரிப்பின் பிராண்ட் அம்பாஸிடரானால் பல கோடிகள் வாங்கலாம் என்றுதானே ? இதற்குத்தானே கிரிக்கெட் விளையாடுகிறவெனெல்லாம் தேசியநாயகனாக சித்தரிக்கப்படுகிறான். இந்த எடுபட்ட மென்பான நிறுவனங்கள் இருப்பதிலேயே பிரபலமான இளம் நடிகர்களை வளைத்துப் போடுகிறார்கள். தொடர்ந்து விளம்பரங்களில் நடிக்க வைக்கிறார்கள். இந்தியா முழுவதும் இனி தண்ணீருக்குப் பதில் கொக்கக் கொலாவையும், பெப்ஸி இன்ன பிற பானங்களையும் காசு குடித்து வாங்கும் நிலைக்கு ஆளாக்குவார்கள் பாருங்கள். இதெல்லாம் இந்த விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்குத் தெரியாமலா இருக்கும். தெரிந்தேதான் நடிக்கிறார்கள்.

இதில் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் இன்னும் யாராரோ தெரியவில்லை. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பே ஏற்பட்ட சர்ச்சையில் இது போன்ற மென்பானங்கள் இங்கே இருக்கும் நீரை உறிஞ்சி நிலத்தடி நீரை மாசுபடுத்தியும், அதை நிரந்தரமாக கெடுத்தும் விடக்கூடியவை என்ற விடயங்கள் எல்லோராலும் யூகிக்கக் கூடியவையே. ஏன் கோக் பெப்ஸி விளம்பரத்தில் பல்லைக் கெஞ்சிக் கொண்டு நடித்த விஜய் தனது கத்தி படத்திலும், விக்ரம் ஐ படத்திலும் குளிர்பானத்திற்கெதிராக வசனம் பேசி தங்களது பாவத்தைக் கழுவிக் கொண்டனர். சூர்யவும் இனிவரும் ஏதாவதொரு ஹரி படத்தில் விறைத்தும் முறைத்துப் பேசிவிடுவார். (விக்ரம் நடித்த அந்த விளம்பரம் ஒளிபரப்பான காலத்திலேயே வெளிவந்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் வடிவேலு அக்கமாலா விளம்பரத்தில் நடிக்கும் நடிகனைக் கன்னத்தில் அறைவது போன்று காட்சி வரும். அப்ப முதலில் மென்பானத்தை எதிர்த்து இளநி குடி என்று சொன்னது வடிவேலுதான்.)

ஆனால் இந்த நடிகர்கள் இப்படி வசனம் பேசுவதால் எவனாவது திருந்துவானா ? கத்தி படம் பார்த்துவிட்டு வந்த ஒரு விஜய் ரசிகன் உணர்ச்சி வசப்பட்டு கோக்கை இனிமேல் தொடமாட்டேன் தலைவரே சொல்லிட்டார் என்பானா. இல்லை தலைவர் படம் செம மாஸ் என்று சொல்வானா ? என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் இது போன்ற மூத்திரங்களைக் குடிப்பவர்களின் மனநிலை என்ன பீடி, சிகரெட், சாராயம் போன்றே கெடுதல்களை எதிர்நோக்கியே குடிப்பது போல்தான். இதில் பெரிய ஸ்டைல், கெத்து என்பதெல்லாம் ஒரு மயிறுமில்லை. சரி இப்படி சராசரி மசாலப் படமொன்றில் விஜய் வசனம் பேசுமளவுக்கு இருக்கிறது இந்த மென்பானங்கள் மீதான் எதிர்ப்பு. இந்நிலையில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் ஒருவர் இந்த விளம்பரத்தில் நடித்து அதைப் பெருமையாக வேறு கருதுகிறாராம். யார் அவர் ? அப்பா அண்ணனால் முன்னுக்கு வந்து, மாமனாரின் பழைய படங்களின் படங்களாக நடித்துத் தள்ளும் ஒருவர். அவர்தான் இன்றைய யூத் ஐக்கானாம்.

இனி பாருங்கள்  இவரே 40 வயதில் ஆக்ஷன் ஹீரோவாக பரிணமித்து விட்டபின்பு ஒரு படம் நடிப்பார். அதில் நாட்டிலேயே பெரிய கூல்டிரிங்க்ஸ் கம்பெனி முதலாளியே தீயகனாக(வில்லன்) இருப்பார். ஊரில் இருக்கும் பெரிய ஆற்றை மாசுபடுத்த வரும் கூல்ட்ரிங்ஸ் முதலாளியை தனி ஒருவனாக போராடி வென்று ஊரிந் ஆற்றையும் விவசாயத்தையும் மக்களையும் காப்பாற்றுவார். அந்தக் கூல்ட்ரிங்ஸ் முதலாளியின் மகள்தான் கதாநாயகி என்பதை சொல்லவும் தேவையில்லை.  அதையும் நம் ரசிகப் பெருமக்கள் வெற்றிப் படமாக்குவார்கள்.


இந்த இணைப்பில் இவர் பெருமைப்படுவதை சொல்லியிருக்கிறார். அதை சிறுமையென்று சாடும் பல சாமானியர்கள். சாமானியர்கள் சரியாக இருக்கிறார்கள், தனக்குப் பின்னால் ஒளிவட்டம் இருப்பவர்கள்தான் பாவம் செய்கிறார்கள். சாமானியனை இளிச்சவாயனாக்குகிறார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment