வாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)


சமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் விற்கப்பட்ட அந்நூல் வேறு எதைப் பற்றியகுறிப்புகளுடன் இருக்கப் போகிறது குதிரையைத் தவிர. வேடிக்கை என்னவென்றால், அந்நூலின் முதல் பக்கத்தில் இந்நூல் விற்பனைக்கன்று சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. என்ன சங்கம் விவசாயிகள் மற்றும் குதிரை வளர்ப்போர் சங்கம் திருப்பூர் மாவட்டம்(FARMERS & HORSE BREEDERS ASSOCIATION TIRUPUR DISTRICT). விற்பனைக்கு இல்லை என்று விதித்திருந்தும் எப்படி விற்பனைக்கு வருகிறது ? விலையைக் காட்டிலும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்தால் விதிமுறை தளர்ந்து விடுகிறது. 

அப்படியென்ன ரகசியம் இதில் இருக்கிறது எனில் குதிரை வளர்க்க விரும்புவோர், வாங்க விரும்புவோர், குதிரை வைத்திருப்போர்களுக்கான குறிப்புகள் அடங்கிய நூல்தானிது. சந்தைக்கு வருகிறவரெல்லாம் குதிரை வாங்கவா முடியும், ஒருபாடு பேர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருகிறார்கள். வருகிறவர்கள் குதிரை வாங்காமல் சந்தைக்குப் போனதற்கான அடையாளமாய், போனால் போகிறதென்று ஒரு சாட்டையையோ அல்லது இது போன்ற ஒரு நூலையோ வாங்கிச் செல்வர் போலிருக்கிறது. 


நூலின் மொழிநடை நூறு வருடங்களுக்கு முந்தியதாகத் இருக்கிறது. குதிரையில் இத்தனை சமாச்சாரங்கள் இருக்கிறதா என்று தோன்றியது. மேலும் வருணாசிரம தருமம் என்ற ஒரு சமாச்சாரத்தைக் கேட்டிருப்போம். அது மனிதர்களுக்கு மட்டும்தானென்றிருந்தேன், ஆனால் மனிதப் பிறவிகள் குதிரைகளின் பிறப்புக்கும் அப்படியொரு விதியை வகுத்து இருக்கிறார்கள் என்று இந்நூலின் மூலம் அறிந்தேன். இதில் வருண பேதம் என்பது குதிரைகளின் நிறத்தை வைத்து கூடும், கூடாது என்று சில விதிகள் கணித்து வைத்திருக்கிறார்கள். பெண் பார்ப்பதற்கு தேவையான தகுதிகளை விட குதிரை வாங்கும் போது இன்னும் அதிகமானவற்றைப்பார்த்து ஆய்ந்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது அந்நூல்.

குதிரை பிறந்த (குட்டி போட்ட) கணத்திலிருந்து அந்த கணிப்புத் தொடங்குகிறது. இன்னின்ன நாட்டில் அல்லது ஊரில் பிறந்த குதிரைகள் இப்படியெல்லாம் இருக்கும், இதனால் அதன் முதலாளிக்கு இலாபமுண்டாகுமா அல்லது கெடுதல் உண்டாகுமா என்றெல்லாம் கணிக்கப்பட்டுள்ளது.

குதிரை எந்த ஊரைச் சார்ந்தது அல்லது நாட்டைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து அதன் வேகம், திறமை, வலிமை குறித்துச் சொல்கிறது இந்நூல். எந்த நேரத்தில் பிறந்தது என்பதைப் பொறுத்து அதை வாங்குகிறவருக்கு, அல்லது வைத்திருப்பவருக்கு ஏற்படும் மாற்றங்கள் - நன்மைகள், தீமைகள் என்று வரையறுக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று - குறிப்பாக சித்திரை மாதத்தில் குதிரை பிறந்தால் அல்லது பிறந்த குதிரையை வைத்திருந்தால், வாங்கினால் அல்லது வளர்ந்த்தால் அந்தக் குதிரைக் காரன் நட்டமடைவான். எனவே பரிகாரமாய அக்குதிரையை பரதேசிகளுக்கு தானமளித்திட வேண்டும் இல்லையெனில் குதிரையின் காதுகளை அறுத்து விட வேண்டுமாம் (:.
                                        
குதிரைகளின் வயதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால், அதன் பற்களின் நிறத்தை வைத்து முடியுமாம். பற்களின் நிறம் மாறும், ஒவ்வொரு நிறமும் மூன்று வருடங்கள் நிலைக்கும் இவ்வாறு ஒன்பது விதமான நிறங்களிருக்கின்றனவாம். காலிகா, அறளிகா, குளிகா, காஜா, மாக்கா, சிங்கா, ஊலிகா, லங்குனி, மற்றும் பெஸ்தி  ஆகியன குதிரைகளின் பற்களின் நிறங்கள். ஒவ்வொரு நிறத்திற்கு குறிப்பிட்ட வயதாக கணிக்கிறார்கள்.

குதிரை வாங்கும் நபரின் முன்பாக அக்குதிரை லத்தி போட்டால் அது நன்மை தரும் குதிரை, எனவே வாங்கலாமாம், சிறுநீர் கழித்தால் அக்குதிரையை வாங்கக்கூடாதாம்.

அடுத்து குதிரையின் ஜாதியறிவது எப்படி என்று விளக்குகிறார்கள்.

குதிரையை நீரின் (நீர் நிலை) முன் விட்டு அதன் மறுவினையைக் கொண்டு ஜாதி பிரிக்கிறார்கள். பிரம்ம க்ஷத்ரிய வைசிய சூத்திர ஜாதியறிதல் இவ்வாறு ;


பிரம்ம ஜாதி -

நீரைக் கண்டவுடன் கண்வரையில் நீரில் தலையை மூழ்க விட்டு நீரைப் பருகும்.
இந்திரியக் கட்டுப்பாடு, நல்ல குணம், புத்திசாலி, குற்றமற்ற நடை
போரில் முன்செல்லாமல் பின்வாங்கும்

க்ஷத்திரிய ஜாதி -

மூக்கு வெளியே தெரியும் படிக்குத் தண்ணீர் குடிக்கும். கோபமும், பராக்கிரமமும் வாய்ந்தது. பெரிய உருவமுடையது. போரில் தனது எஜமானனைக் காக்கும், எதிரிகளைக் குதறி துவம்சம் செய்யும். போருக்குத் தகுதியானவை

வைசிய ஜாதி -

வாய் பட்டும் படாமலும் நீர் பருகும், நீரைக் கண்டு அஞ்சியே நடக்கும். இயற்கைச் சீற்றம் தாங்கும். ஓய்வில்லாது உழைக்கும் முரட்டு வேலைக்கு ஆனது.. சவாரிக்கும், கீழ்ப்படியவும் ஆகாதது.

சூத்திர ஜாதி -

சவுக்காலடித்தாலொழிய நீரில் கால் வைக்காது. அச்சமும் அயோக்கியத்தனமும் உடையது. எஜமானனைக் கீழே தள்ளி கடித்துக் கொன்று விடும்

இதில் சூத்திர ஜாதிக் குதிரையை மட்டும் வாங்கக் கூடாது. வாங்குவோர் நட்டமடைவர். இன்ன பிற மூன்று ஜாதிக் குதிரைகளையும் வாங்கலாம் அதிலும் வைசிய ஜாதிக்குதிரை கடின வேலைக்கும் மட்டும் உதவும். முதலிரண்டு ஜாதிகளுமே வாங்கத் தக்கவை.. பெருமைக்குரியவை.

குதிரைகளின் சுழியை வைத்தும் சில பண்புகளைக் கணிக்கலாமாம்.

குதிரைகளின் ராசி வகைகள் -  காத்திராசி, பத்தவிராசி, கீரிராசி

என்றெல்லாம் அந்நூல் விவரித்துச் செல்கிறது. வருண பேதமும் இருக்கிறது, இதில் குதிரையின் வண்ணங்களின் கலவையைக் கொண்டு பிரிக்கிறார்கள். வால் மட்டும் வெள்ளை மற்ற இடங்கள் கருப்பு, ஒரு கால் மட்டும் கருப்பு மற்ற பாகங்கள் வெண்மை, அல்லது பிடரி கண் முடிகள் மட்டும் கருப்பு இன்ன பிற இடங்கள் வேறு நிறம் என்று ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பெயராக வைத்திருக்கிறார்கள். குதிரைகள் இப்படியாக பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டேன். இதிலிருந்து என்ன புரிகிறதோ அதைப் புரிந்து கொள்ளுங்கள் நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. 
                                                                                                           
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

8 கருத்துகள்:

  1. நண்பரே மிக நல்ல? ஒரு நூலை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்! எங்கள் தளத்தில் எழுதுபவர்களில் எங்கள் இருவரில் கீதாவின் மகன் கால்நடை மருத்துவர். இங்கு படித்துவிட்டு, தற்போது கனடாவில், வெளி நாட்டில் கால்நடை மருத்துவம் பயின்ற மாணவர்கள் அங்கு வேலை செய்ய வேண்டியப் பயிற்சி எடுத்துக்
    கொண்டிருக்கின்றார். சிறிய பையன் தான். இந்தப் புத்தகத்தைக் கொடுத்தால் கண்டிப்பாக வாசிப்பார் ஆனால் சிரிப்பார். ஏனென்றால் வெளிநாட்டில் குதிரைகள் வளர்ப்பு நம்மூரை விட மிக அதிகம் என்பது தங்களுக்குத் தெரிந்ததே. அங்கு இது போன்று நேரம் பார்த்து வாங்குவார்களா என்ன? மூத்திரம், லத்தி, சாதி என்று மூடநம்பிக்கைகள் பார்ப்பது என்ற தகவல்கள் வியப்பாக இருக்கின்றன. மகன் சொல்லுவது குதிரையின் ஆற்றல் கணிக்கப்படும், குதிரைகளின் லேம்னெஸ் என்ற ஒன்று காலில் வருவது இது பார்க்கப்படும்....இப்படி ஆரோக்கியம் குறித்துத்தான் பார்க்கப்படுமே அல்லாது இது போன்றவை அல்ல. நல்ல காமெடியாக இருக்கின்றது.
    இது கிடைக்குமென்றால் அவருக்கு ஒன்று அனுப்பி வைக்க வேண்டும்.....

    மிக நல்ல பகிர்வு நண்பரே! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளசிதரன். இந்நூலின் முற்பகுதியில்தான் மேற்கண்ட தகவல்களைக் கொடுத்துள்ளார்கள். பிற்பகுதியின் பெரும்பான்மையாக குதிரைக்கு வைக்க வேண்டிய உணவுகள், தயாரிப்பு முறைகள், நோய் அறியும் முறை என்று விரிவாகக் கொடுத்திருந்தார்கள். அதைப் பற்றிய நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே அது குறித்து சொல்ல முடியும். நூலை வாசிக்கும் போது ஜாதி, வருண பேதம் என்றெல்லாம் இருந்ததால் அது குறித்து எழுதினேன்.

      கால்நடை மருத்துவராக இருந்தால்தான் இதைப்படித்துச் சிரிக்க வேண்டுமா என்ன ? கால்நடை வைத்திருக்கும் நாமே சிரிக்கலாம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. இது விற்பனைக்கு அல்ல என்று போட்டிருந்தார்கள். என் உறவினர்க்கு அன்னூரில் நடந்த குதிரைச் சந்தையில் கிடைத்தது

      நீக்கு
  3. பெயரில்லா14/8/23 12:06 AM

    நான் என் நண்பர் மூலியமாக உங்கள் குதிரை சாஸ்திரத்தை படித்தேன், மிகவும் அருமையாக, இருந்தது. நான் என் தோட்டத்தில் குதிரை வளர்க ஆசை படுகிறேன், குதிரை சாஸ்திரத்தை book எங்கே வாங்க வேண்டும் என்று தெரியபடுதுங்கள், எனது தொலை பேசி எண் 9942068886 SIVDEVA, CHENNIMALAI.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா19/4/24 4:27 PM

    எனக்கும் இந்த புத்தகம் வேண்டும் எங்களை போன்ற இளம் சந்ததிகள் படித்து தெரிந்து கொல்ல கொஞ்சம் உதவி செய்ங்கள் 8939243030 🙏

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா19/4/24 4:27 PM

    எனக்கும் இந்த புத்தகம் வேண்டும் எங்களை போன்ற இளம் சந்ததிகள் படித்து தெரிந்து கொல்ல கொஞ்சம் உதவி செய்ங்கள் 8939243030 🙏

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்