இளைய ராஜாவின் இசையுடன் இசைந்தேன்

எனக்கு இசையைத் திறனாய்வு செய்யுமளவுக்கு பேரறிவெல்லாம் இல்லை. எனக்குப் பிடித்த பாடல்கள் அல்லது இசை ஆகியவற்றை நான் நேசிக்கிறேன். அதை எல்லோரும் என்னைப்போலவே ரசிக்க வேண்டும் என்ற நப்பாசையெல்லாம் எனக்கில்லை. குறிப்பிட்ட இசையமைப்பாளரின் பாடலைக் கேட்டால் உணர்வுப்பூர்வமாக இனிமையாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒருவரிருப்பார். எனக்கு இளையராஜா. நான் எல்லோருடைய இசையையும் கேட்பது வழக்கம். இன்னாரின் இசையமைப்பில் வெளிவந்த பாடல் என்று அதை வெறுப்பது கிடையாது. பரத்வாஜ், வித்யாசாகர் ஆகியோரும் பிடித்தவர்கள். 

தற்போதுதான் நீதானே என் பொன் வச்ந்தம் பாடல்கள் கேட்டேன். இரண்டு பாடல்கள் நான் எதிர்பார்த்தபடியும் வழக்கமாக நான் விரும்பும் பாடல்களைப் போலவும் இருந்தது. பெண்கள் என்றால் பொய்யா வகைப் பாடல்களையெல்லாம் நான் எப்போதும் விரும்புவது இல்லை, கருத்திலும் சரி இசையிலும் சரி. பலரும் பாடல்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்று சொல்லி விட்டார்கள். 

நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் நான் எதிர்பார்த்தபடிதான் இருந்தது. இதில் போதாமை என்று கருதினால் இளையராஜாவின் காலத்தை வென்ற சில பாடல்களைக் கொண்டு இதனுடன் ஒப்பிட்டால் அப்படித்தான் தோன்றும். அதே நேரம் இளையராஜா தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரிரு பாடல்களை நான் மிகவும் விரும்பிக் கேட்பதுண்டு. மற்ற பாடல்கள் படத்தின் காட்சிக்குத் தோதாக அமைக்கப்பட்டிருக்கும்.
நாம் இசையைத் திரைப்படத்தின் வாயிலாகவே கேட்கிறோம். உண்மையில் இசை என்பதே திரைப்படங்களுக்கு உயிர் கொடுப்பவை. திரைப்படங்கள் என்பவை பெரும்பாலும் வணிக ரீதியிலானவை. ரசிகனுக்கு அலுப்புத் தட்டக்கூடாது என்பதற்காக சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், சண்டைக்காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் பாடல் காட்சிகள் என நவரசமத் துண்டுகள் சேர்க்கப்பட்டு, மசாலாவாகப் பரிமாறப்படுகிறது. இது போன்ற பல அற்பமான படங்களின் துணையாகவே இசை இருக்கிறது. அதையே நாம் கேட்க முடிகிறது. எல்லாக் கலைஞர்களும் பாடலாசிரியர்கள், கதை ஆசிரியர்கள் என அனைவருமே மசாலா திரைப்படங்களுக்காக தமது தனித்தன்மைய விட்டு வணிகத் திரைப்படத்திற்குத் தேவையானதைத் தர வேண்டியுள்ளது. அக்குறிப்பிட்ட வட்டத்துக்குள் தமது திறமையை வெளிக்காட்ட வேண்டியுள்ளது. 

இப்படியான பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜா அப்படங்கள் மறந்து போனாலும் பாடல்கள் இன்னும் நிற்கின்றன. ரஹ்மானும் வேதனைப்பட்டார் ஒரு முறை இசை என்றாலே திரைப்படங்கள் மட்டும்தானா என்று. வெளிநாடுகளில் இசைக்கென்று ஒரு தனி இண்டஸ்ட்ரியே இருக்கிறது என்று யுவன் சொன்னார். அது உண்மைதான் வெளிநாடுகளில்தான் இசைக்கலைஞர்களுக்கு தனி ஒளி வட்டம் இருக்கிறது. அது கொஞ்சம் அதிகம்தானென்றாலும், ஆட்டுவிக்கப்படும் பொம்மை நடிகர்களுக்கிருக்கும் புகழை விட அது பொய்யானதில்லை. ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்ததால்தான் அவர் சிறந்த இசையமைப்பாளர் என்பது இசையை இழிவு படுத்துவதாகும். ஆஸ்கர் என்பவை அமெரிக்க ஹாலிவுட் படங்களுக்கு கொடுக்கப்படும் விருது மட்டுமே. ஒரிரு வெளிநாட்டுப்படங்களுக்கும் கொடுப்பார்கள். அது அமெரிக்காவின் விருது என்பதால் மட்டும் அது பெரிதாகப் புகழப்படுகிறது. ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் ஆனால் ஆஸ்கர் என்பது அதற்குரிய அங்கீகாரமல்ல. நடிகர்களுக்கு அதிகமான புகழ் நிறைந்த இந்தியாவில் ரஹ்மான் மட்டுமே நடிகரல்லாமல் அதிகம் பேரை கவர்ந்த கலைஞராக இருக்கிறார். 

ஒருவரைப் பிடிக்கிறது என்பதற்காக மற்றவரை மட்டம் தட்டி அவரை விட இவர் சிறந்தவர் என்ற சண்டைக்கெல்லாம் நான் போவதில்லை. இளையராஜாவின் இசை எனக்குத் தனித்துவமாகத் தெரிகிறது அவ்வளவே. 

இளையராஜா பழைய அளவுக்கு இசையமைப்பதில்லை, சரக்கு தீர்ந்து விட்டது என்று சொல்வதையும் நான் ஏற்கவில்லை. அவரது முத்திரையை அவ்வப்போது அவர் பதித்துதான் வருகிறார். 80 களில் இருந்த இசை வேறு, 90 களில் வேறு 2000 களில் வேறு தற்போது வேறு. இசை திரைப்படத்தைச் சார்ந்துதான் வெளியாகிறது. திரைப்படங்களைப் பொறுத்தும் இசையின் தன்மை மாறுபடுகிறது. வேகமாக வந்து போகும் காலத்தில் தாம் தூமென்று தட்டிப் போட்டால்தான் இசை இப்போது இறக்குமதியாகும் ஒரு மாதம் முடியும் முன்பு மறக்கப்பட்டு காற்றில் போய்விடும். இங்குதான் இளையராஜாவின் சரக்கு விற்பனையாவதில்லை. அதனால் அது தாழ்ந்தது என்று பொருளில்லை. 

அன்னக்கிளி உன்னைத் தேடுதே - அன்னக்கிளி - 1976 - ஒரு காலம்

நீதானே என் பொன்வசந்தம் - நினைவெல்லாம் நித்யா - 1982 - ஒரு காலம்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி - 1991 - ஒரு காலம்

இளங்காத்து வீசுதே - பிதாமகன் - 2003 - ஒரு காலம் 

என்னோடு வா வா - நீதானே என் பொன்வசந்தம் - 2012 - ஒரு காலம் 

இதில் என்னைத் தாலாட்ட வருவாளா என்ற பாடல்தான் எனக்குத் தெரிந்து நீண்ட நாட்களாக விரும்பிக் கேட்கப்பட்டது. 

இளையராஜாவின் பழைய சாதனைகளுடன் ஒப்பிடும்போது இது நிறைவில்லை என்றாலும் எனக்கு பெரிய குறையொன்றுமில்லை. இதற்கு முன்பு நான் கேட்ட பாடல்கள் படத்திற்கு ஒன்று வீதம் என்னைக் கவர்ந்தது. 


நண்பர்களுடன் FM கேட்டுக் கொண்டிருந்த போது தில் படத்திலிருந்து உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா -  பாடல் போட்டார்கள். அதைக்கேட்ட நண்பர்கள் இதைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றார்கள். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல், கவிதையைப் போன்று எழுதப்பட்டது. இப்படிச் சொன்னவுடன் எனக்கு எரிச்சலே வந்து விட்டது இவர்களுக்கெல்லாம் ரசனையே இல்லை என்று.  அவர்களோ "முப்பொழுதும் உன் கற்பனைகள்" பாடல் வரிகளை மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அது எனக்குக் கொஞ்சம் கூட ஒட்ட வில்லை. இசை அவரவர் விருப்பம் சார்ந்தது. 

எந்த இசை உங்களை மயக்குகிறதோ அதில் கரையுங்கள். நானும் அப்படியே எனக்கு இளையராஜாவின் இசை. பவதாரிணி, சுஜாதா, ஷ்ரேயா கோஷல் போன்றோரின் குரல்வளத்துக்கு நானடிமை.

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் எனக்கு பிடித்த பாடல்கள். 

என்னோடு வா வா . 


வானம் மெல்லக் கீழிறங்கி வந்ததே 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை இல்லை இல்லவே இல்லை !!


எங்கேயாவது யாராவது திராவிட இயக்கத்தினர் அல்லது தமிழர்கள், தமிழகத் தலைவர்கள் தமிழரை ஹிந்தி கற்பதிலிருந்து தடுத்து விட்டனர் என்று சொன்னால் சுர்ரென்று கொதிப்பு தலைக்கு ஏறிவிடுகிறது. இதே போல் வெறியேற்றும் இன்னொன்று இங்கிருந்து இலங்கைக்குப் போய் நாடு கேட்டால் அவனெப்படிக் கொடுப்பான் ? அவர்கள் தெரியாமல் சொன்னாலும் சரி தெரிந்து சொன்னாலும் சரி. எல்லா இடத்திலும் போய் சொல்லிக் கொண்டிருக்கவா முடியும். என்றாலும் சிலரிடம் புரிந்து கொள்ளும் தன்மையுடையவரிடம் மட்டும், தோன்றுகிறவரிடம் மட்டும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன், இருக்கிறோம். இருந்தாலும் பெரிய ஞானமுடையவரெல்லாம் இதை சொல்வதுதான் செரிக்க முடியாததாக இருக்கிறது.

அது என்ன எழவோ தெரியவில்லை. ஹிந்தி வெறுப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்கிறார்கள்.  இந்த ஒரு சொல்லில் வரலாற்றைத் திரிப்பது என்று சொல்வது போல இந்த ஒரு வரியில் அத்தனை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி, காக்கையைக் குயிலாக்கி, குயிலை கழுகாக்கி விடுகிறார்கள். 


காந்தி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்

பாரதியார் தமிழை உயர்த்திப் பாடினார்.

இது போன்ற ஒரு வரியில் வரலாற்றைத் தவறாகப் பரப்புவது போலத்தான் ஹிந்தி தேசிய மொழி என்ற பொய் திரும்பத் திரும்பப் பரப்படுகிறது.

தேசிய மொழியாகிய ஹிந்தியைத் தமிழர்கள் கற்பதை அரசியல் வாதிகளும் மொழி வெறியர்களும் தடுத்து விட்டார்கள் அதனால்தான் தமிழர்கள் முன்னேற முடியவில்லை அல்லது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுகிறார்கள்.

நான் அங்கே போனேன், ஹிந்தி தெரியாமல் தொல்லையாக இருந்தது, இன்னார் கேட்டார் அவமானமாக இருந்தது. அரசியல்வாதிகளை நினைத்து ஆத்திரமாக வந்தது.

இது மாதிரியான பேச்சுக்களை அவ்வப்போது அடிக்கடி கேட்கவும் வேண்டியிருக்கிறது. இதிலெது உண்மை ? இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது. ஹிந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஹிந்தி அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் காரணமாகவும் ஹிந்தி மற்ற மொழிகளைக் காட்டிலும் பெரும்பான்மை மொழியாக இருப்பதன் காரணமாகவும்தான். இதில் நடுவண் அரசின் பலதுறைகளில் தனிப்பட்ட முறையில் ஹிந்தி வளர்ப்பு அல்லது திணிப்பதற்கெ அரசே முகவராக செயல்படுகிறது.

மொழி வெறி என்னவென்று பார்ப்போம். தமிழ் வெறியர்கள் ஹிந்தியை கற்பதைத் தடுத்து விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு. எது மொழி வெறி. இந்தியா உட்பட பல மூன்றாம் உலக நாடுகள் 1950 களுக்கு முன்பு இல்லை. அவர்கள் வசதிக்கேற்ப சிலவற்றை பிரித்துக் கொடுத்தும், சேர்த்து விட்டும் சென்றனர். இந்தியாவில் பல தேசிய இனங்கள் ஒற்றுமையுடன் வாழ்வதும், ஆப்ரிக்க கண்டத்தில் ஆடை கூட அணியாத மனிதர்கள், ஏகே 47 துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மற்ற இனங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு கண்டங்களிலும் வளங்கள் சுரண்டப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் 500க்கும் மேற்பட்ட சிற்றரசுகளாக இருந்தது. தொடர்ந்து படையெடுப்புக்கள், இறுதியாக முகலாயர், பின்பு ஆங்கிலேயர் ஆகியோர் மொத்தமாக இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை ஒன்றாக ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

பின்பு 1947 - இல் பிரிட்டிஸ் வெளியேற இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டாகப் பிரித்துக் கொண்டனர். இந்தத் தலைமையின் கீழ் பல தேசிய இனங்கள் அடிமையாயின. 2 டஜன்க்கும் மேலான மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தன. ஆங்கிலேயர் ஆதிக்கம் காரணமாக ஆங்கிலமும் இருந்தது. ஆங்கில அறிவின் காரணமாகத்தான் பல நாட்டு தத்துவங்களும் சித்தாந்தங்களும் அறிமுகமாயின. ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் பல மொழிகள் பேசியவர்கள் நிறைந்த நாட்டை ஒரு தேசியத்தில் அடைக்க முயன்றார்கள். மற்ற சிறுபான்மை மொழிகளின் அடையாளங்களை அழிக்க முயன்றார்கள். அன்றைக்கு ஆங்கிலம் இருக்கும் நிலைக்கு பதிலாக ஹிந்தியைத் திணிக்க எத்தனித்தார்கள்.

நாட்டுக்கு "சுதந்திரம்" வாங்கித் தந்த காங்கிரஸில் இருந்தவர்கள் பெரும்பான்மையான தலைவர்கள் ஹிந்தியை தேசிய மொழியாகக் கொண்டவர்கள். ஹிந்தி வெறியர்கள். ஹிந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களுக்கு தேசிய மொழியின் பெயரால் ஹிந்தியைத் திணிக்க முயன்றனர். அதை மற்றவர்கள் எதிர்த்தார்கள். தமிழர்கள் அதிகமாக கடுமையாக எதிர்த்தார்கள். இது போன்ற பிரச்சனைதான் கிழக்கு பாகிஸ்தானில் உருதுவைத் திணித்த போது வங்காளிகள் அதை எதிர்த்தனர், வங்கதேசம் உருவானது.

ஹிந்தித் திணிப்பைத்தான் ஹிந்தி எதிர்ப்பு என்றும் ஹிந்தி வெறுப்பு என்றும் திரித்து பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் மீது தம் மொழியைத் திணித்து அவர்களை அடிமைப்படுத்த நினைப்பவன் மொழி வெறியனா அல்லது தம் மொழிக்காக போராடுகிறவன் மொழிவெறியனா ? ஹிந்தி வெறியர்கள் என்று யாருமே சொல்லக் காணோம். ஹிந்தி வெறியர்கள்தான் போராட்டத்தை அடக்க மத்திய ரிசர்வ் படைய அனுப்பினார்கள். போராடியவர்களை சுட்டுக் கொன்றார்கள். ஹிந்தி வெறியன் என்று யாருமில்லையாம். ஆனால் நமக்கு மட்டும் ஹிந்தி வெறுப்பாளன் பட்டம். சரி இப்படி வைத்துக் கொள்வோம், ஒரு வேளை காங்கிரஸில் தமிழர்கள் அல்லது தமிழ் வெறியர்கள் அதிகமாக இருந்து, தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்திருந்தால் அதை மற்றவர்கள் எதிர்த்திருந்தால் என்ன நிலை எடுப்பார்களோ அது போலத்தான் இதுவும்

ஹிந்தி கற்றுக் கொள்வதை யாரும் எதிர்க்கவுமில்லை, வெறுக்கவுமில்லை. அந்தக் காலத்தில் வட இந்தியர் ஆதிக்கமிருந்ததன் காரணமாக பல அரசுத் தொழில் நிறுவனங்கள் வட இந்தியப் பகுதிகளில் தொடங்கப்பட்டன. அங்கே செல்ல வேண்டிய தேவை தென்னிந்தியர்களுக்கு இருந்தது. அதை வைத்து அக்காலத்தில் ஹிந்தி தெரியாதவர்களை குற்ற உணர்வுக்குள்ளாக்கினர். இந்த உலக மயக் காலத்தில் வட இந்தியர்கள் தென்னிந்தியா நோக்கி பிழைக்க வரும் நிலை இருக்கிறது. இன்னும் வந்து பழைய பாட்டையே பாடிக்கொண்டிருப்பது ஒன்று அறியாமை இல்லையென்றால் அயோக்கியத்தனம்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு தெரியவில்லை என்று அந்தந்த மாநிலத்திற்குச் செல்லும்போது எவ்வளவு வருத்தப்படுவோமோ அவ்வளவு வருத்தப்பட்டால் போதுமானது. தேசிய மொழியைக் கற்கவில்லை என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

ஹிந்திக்குப் பதிலாக ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மாண்டரின், உருது அரபி ஆகியவை தெரியவில்லை என்றும் வருத்தப்படலாம் தவறில்லை. ஹிந்தி தெரிந்தவர்கள் ரொம்பவும் பீற்றிக் கொள்ளத் தேவையில்லை. வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே படும் அவலங்களைக் கண்ட பிறகும் ஹிந்தி தேசிய மொழியைக் கற்காமல் ஏமாந்து விட்டோம் என்று கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். 

படம் - ஃபேஸ்புக்
இன்னொன்று, ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு மட்டும் எதிர்க்கவில்லை என்பது வரலாறு. தமிழர்களைப் போலவே மொழி உணர்வுடையவர்கள் வங்காளிகளும் கன்னடர்களும். தற்போது ஸ்ரீதேவி நடித்து இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படம் வெளியாகவுள்ளது. அதில் அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆங்கிலம் தெரியாமல், அமெரிக்காவில் எப்படி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு ஹிந்தி தெரியாமல் அமெரிக்கர்கள் இந்தியாவில் எப்படி சமாளிப்பார்களோ அது போலத்தான் என்கிற பாணியில் பதிலளிப்பது போலவும் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் காட்டியிருக்கிறார்கள். ஹிந்தி பேசும் ரசிகர்களிடம் கைத்தட்டலை எதிர்ப்பார்த்தோ அல்லது தமது அறிவின் அடிப்படையிலோ இக்காட்சியை வசனத்தை இயக்குனர் வைத்திருக்கலாம். இது ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களை இழிவு செய்வதாகக் கூறியும், அவ்வசனத்தை நீக்கக் கூறியும், ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியன்று எனவும் ஃபேஸ்புக்கில் ஒரு கையெழுத்துக்கள் மூலமாக எதிர்ப்புக்குரல் Change - தளத்தில் தொடங்கப்பட்டது.

இதைத் தொடங்கியவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் இல்லை. கன்னடர்கள். அதனால் தமிழர்களைப் போல மொழிவெறியர்கள், திராவிட இயக்கம் தடுத்து விட்டது என்ற வாதமெல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

அந்த இணைப்புக்கள் :- 


இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லை என்பதற்கான  ஆவணம்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கூடங்குளம் அணு உலை - நடுநிலை கருத்துக்களின் உண்மை நிலை !!


தற்போது நடந்து கொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்களும் ஆதரவுகளும் வருகின்றன. நான் அணு உலைக்கு எப்போதுமே எங்குமே எதிரான நிலைதான். இயற்கை சாராத இயற்கைக்கு எதிரான, சுற்றுப்புறச் சூழலுக்கு எதிரான, மனிதர்க்கு எதிரான, அழிவு தரக்கூடிய, அல்லது அழிக்க முடியாத கழிவுகளை உருவாக்கும் எவ்வகையான திட்டமுமே என்னால் ஆதரிக்கப்படாது. எந்த ஒரு இயற்கை ஆர்வலரும் ஆதரிக்க மாட்டார்கள். இயற்கைக்கு எதிரான எல்லாவற்றையும் எதிர்ப்பார்கள். இதை  இயன்ற வழிகளிலெல்லாம் சொல்லி விட்டாயிற்று. எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் என்னை பெரியதாக ஒன்றும் கவரவில்லை, எனது நிலையை மாற்றிடவில்லை. சில இடங்களில் பதில் சொல்ல இயலாத விடை தெரியாத விஞ்ஞான விளக்கங்கள் என்னை மௌனமாக்கிய போதும் கூட.

அணு உலை என்பது அணு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையைப் போல என்று நான் கற்பனை செய்து கொள்ள வில்லை. ஆனால் ஒரு சிறு விபத்து என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று படித்ததன் விளைவே அதன் மீது கடுமையான வெறுப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.  அணு உலை விபத்துக்களினால் இறந்தவர்கள்  போகட்டும், அதனால் பாதிப்படைந்தவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள், அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் உதவிகள் இது குறித்த விபரங்கள்தான் இன்னும் அச்சுறுத்துகின்றன. ஒரு வேளை ஒரு வேளைதான், ஏதாவது நடந்து விட்டால் அரசின் உதவிகள் இன்ன பிறவும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி வரலாறு ஏற்கெனவே பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது.

இன்னொன்று இந்த வளர்ச்சி என்பதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்வதேயில்லை. இந்த வளர்ச்சியினால்தான் சிலருக்கு வசதிகள் கிடைத்திருக்கலாம். ஆனால் முப்போகம் விளையும் விவசாய நிலத்தைப் பறித்து அதில் செல்பேசி நிறுவனத்தையோ, மகிழுந்து தயாரிக்கும் நிறுவனத்தையோ கட்ட வேண்டும் என்று அரசு காவல்துறையையும், இராணுவத்தையும் வைத்து விவசாயிகளை அச்சுறுத்தும் திட்டங்களைத்தான் செயல்படுத்தி வருகிறது. இது போன்றதொரு திட்டம்தான் அணு உலை மின்சாரம். வளரும் நாட்டுக்குத் தேவை. இது இல்லாவிட்டால் நாட்டிற்கு மின்சாரம் கிடைக்காது, இந்தியா வல்லரசாவது தடைப்படும் இது மாதிரியான கதைகளெல்லாம் நம்ப முடியாது. 100 செயற்கைக்கோள்கைளை ஏவுவதை விட எல்லோருக்கும் சோறு கிடைக்க வேண்டும், இருப்பவனிடம் வளர்ச்சியின் பேரால் இருப்பவை பிடுங்கப்படக் கூடாது என்பதையே விரும்புகிறேன்.

நடுநிலையாளர்களின் கருத்துக்கள்

எல்லா இடங்களிலும் நடுநிலை எடுக்க முடியாது. ஒன்று வேண்டு அல்லது வேண்டாம் என்பதே இங்கு நிலைப்பாடாக இருக்க முடியும். அதிமுக அல்லது திமுக, விடுதலைப்புலிகள் அல்லது இலங்கை அரசு, அமெரிக்கா, ரஷ்யா இது போன்ற இடங்களில் இரண்டையும் எதிர்த்து நடுநிலை எடுக்கலாம், ஒரு கருத்தையோ அல்லது தீர்வையோ சொல்லலாம். ஆனால் சில இடங்களில் ஏதாவது ஒன்று மட்டுமே இருக்க முடியும். இடது சாரியா வலது சாரியா என்றால் நான் நடுநிலை என்று சொன்னால் அது வலதுசாரிக்கு ஆதரவாகவே முடியும். அது போல இங்கே அணு உலைக்கு எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் நடுநிலைக் கருத்து என்று சிலவற்றைக் காண நேர்கிறது. நடுநிலை என்ற பார்வை அல்லது போர்வையில் என்ன சொல்கிறார்கள் என்றால் அணு உலை வேண்டும் என்கிறார்கள்.

நடுநிலை பார்வையின் படி,

அணு உலை எதிர்ப்பாளர்கள் பல நாடுகளில் அணு உலை பாதுகாப்புடன் இயங்கி வருவதை மறைக்கிறார்கள், எல்லா அணு உலையும் ஆபத்தானதில்லை

எல்லா நாடும் அணு உலைகளைக் கைவிட்டு விட விருப்பமில்லாமல் இருக்கின்றன.

தற்போதைய நிலையில் இதை விட்டால் வேறு வழியே இல்லை

அல்லது

தமிழனுக்கு உணர்ச்சி வசப்பட மட்டுமே தெரியும், கேட்டுப்புரிந்து கொள்ளும் பொறுமை கிடையாது.

வழக்கமான போராட்டக்காரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், உதயகுமார் மீதான அவதூறுகள்

பாமரர்களை ஏமாற்றும் சில அறிவிலிகள்

மக்களுக்கு அச்சத்தைப் போக்க வேண்டும் அணு உலை திறக்க வேண்டும்

இந்த வகைகளில் இருக்கின்றன. இவை அனைத்தும் அணு உலை ஆதரவாளர்களின் கருத்துத்தான். பல நாடுகளில் இருந்தாலும் இயங்கினாலும் அவை எதிர்க்கப்படும், எல்லாப் போராட்டமும் எதிர்ப்புக்களும், ஆதரவும் சூழல் ஆர்வலர்களின் கருத்துக்களும் கூடங்குளம் அளவுக்கு பெரிய அளவில் கவனமும், ஆதரவும், ஊடக வெளிச்சமும் படாமலே போயிருக்கலாம். சிறிய அளவில் இருந்திருக்கலாம். ஃபுகுஷிமா விபத்து வரை உதயகுமாரையே கூடங்குளத்திலேயே பல பேர் நம்பவில்லை.

உதயகுமார், தனிநாடு கேட்கவில்லை, தடை செய்த இயக்கங்களை ஆதரிக்க வில்லை, யாரையும்  கொல்லவுமில்லை, வன்முறையில் ஈடுபடவில்லை. பின்பே இத்தனை அவதூறுகள் ? இத்தனை நாளாக நல்லவர்கள், அறிவாளிகள் நடுநிலையாளர்கள் என்று சொல்கிறவர்கள் கூட அவதூறு மழை பொழிகிறார்கள். தினமலரைப் போல உருமாறுகிறார்கள், திரைக்கதை எழுதிகிறார்கள். அணு உலை வேண்டாமென்று சொல்ல இத்தனை தரவுகளும், ஆதாரங்களும் உலகெங்கும் கண்டுமா இன்னும் தூங்குவது போல நடிக்கிறார்கள். 

படம் - நன்றி : ஃபேஸ்புக்

தமிழ்நாட்டு தமிழனின் மின்சாரத் தேவைக்குத்தான் தினமலரும் தினகரனும் செய்தியை வெளியிடுகிறார்கள் போல. எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் போல.

சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உண்டு. மனசாட்சி இருந்தால் !!!
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அணு உலைக்கு ஆதரவாக அவதூறுகளே ஆயுதம் !!

கூடங்குளம் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே கவனித்தால் ஒன்று புலனாகிறது. அணு உலை பாதுகாப்பானது என்று கருத்து நம்பவைக்கப்படுவதை விட உதயகுமாரை தேசத்துரோகியாக்குவது மட்டுமே ஒரே வழி என்ற கருத்துகள் அதிகமாக வைக்கப்படுகின்

திரும்பவும் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் அவதூறுகள்மட்டுமே இன்னும் பரவலாக வெவ்வேறு வகையில் வைக்கப்படுகின்றன. காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுமல்லவா அதனால்தான்.

அணு உலை பாதுகாப்பானது நாட்டுற்கு மிகவும் இன்றியமையாதது என்றெல்லாம் விளக்க முயன்று அதில் பெரிய வெற்றி பெற முடியாத நிலையில் உதயகுமாரையும் அவரது போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அவதூறு செய்வது மட்டுமே இப்போது அணு உலை ஆதரவாளர்களின் போராட்டமாகியுள்ளது.

கடந்த ஒரு வருடமாக வன்முறையின்றிப் போராடி வந்த போதும், தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே அடிதடிகள் நடந்தன தூத்துக்குடியில் ஒரு மீனவர், அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் பலி ஆவார். இது போக போராட்டக்காரர்களின் ஒரு குழந்தையும் பலியாகியுள்ளது. காவல்துறை உள்ளே இறங்கிய பின்னர்தான் இந்த வன்முறையும் நிகழ்ந்தது. உயிர்கள் பலியானதும் இதனால்தான்.

இதன் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பார்த்தால் புரியும். உதயகுமாரை அவதூறு செய்வதன் மூலமே அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு எதிரான மனநிலையை வளர்த்து வந்துள்ளார்கள். கருணாநிதியும், ஜெயாவும் ஒரே நிலைப்பாடு எடுத்த  விவகாரம், கம்யூனிஸ்டுகளும், பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு, வீரமணியும், இந்து முண்ணனியும் ஒரே நிலைப்பாடு. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழுக்கு உயிரையை கொடுக்கும் தமிழ்ப் போராளிகள் பலர் லேசான முனகல் மட்டுமே செய்தார்கள்.


நடுவண் அமைச்சர் நாராயண சாமி இதில் நக்சல்களின் தொடர்பு என்றார். பிரதமர் மன்மோகன் சிங் நக்சலைட்டுகளை விட ஒரு அடி மேலே போய் அமெரிக்காவின் பணம் இப்போராட்டத்தில் இருக்கிறது என்றார்.

அடுத்து தனிநபர் அவதூறுகள். கிறித்துவ நிறுவனங்களின் சதி என்கிறார்கள். ரஷ்யா இந்து நாடோ, முஸ்லிம் நாடோ, கம்யூனிஸ நாடோ  இல்லை. கிட்டத்தட்ட கிறித்தவ மதவாதிகள் ஆதிக்கம் செய்யும் நாடுதான். கிறித்தவ நாடுகளின் திட்டங்கள்தான் இந்தியாவில் பலதும் நிறைவேற்றப்படுகின்றன. அதற்குத்தான் இந்திய அரசியல்வாதிகளே முகவர்களாக செயல்படுகின்றனர். பிடி பருத்தி, பிடி கத்தரிக்காய், மேலும் சில்லறை வர்த்தகத்தில் வால் மார்ட் என்ற கிறித்த நாட்டு நிறுவனம்தான் வரப்போகிறது.

அமெரிக்காவுடன்தான் இந்தியா ராணுவ ஒப்பந்தம், அணு சக்தி ஒப்பந்தம் போட்டுள்ளது. இதெல்லாம் கிறித்தவ நாடுகளோ, மிசனரிகளோ இல்லையா ? இந்தியாவிற்கு எதிரான பொதுமக்களுக்கு எதிரான இதில்தான் வெளிநாட்டுப்பணமும், தொண்டு நிறுவனங்களும் பணத்தைக் கொடுத்து அரசியல் வாதிகளைச் சரிக்கட்டி, இத்திட்டத்தை நாட்டு மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறார்கள்.

இந்தியாவில் மின்சாரம் பற்றாக்குறை என்கிறார்கள். கூடங்குளம் தொடங்கினால் அது தீர்க்கப்படும் என்கிறார்கள். அதே வாயால்தான் பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் மின்சாரம் இந்தியாவிலிருந்து வழங்கப்படும் என்கிறார் பிரதமர். இந்தியாவிற்கே பற்றாக்குறையான மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கு ஏனப்பா வழங்க வேண்டும்.

அணு உலை ஆதரவாளர்களின் மிகப்பெரியா தேசபக்திக் கோரிக்கை என்ன வென்றால், கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டுமாம். இது ஒரு பெரிய கோரிக்கையாம். அது நடக்காது என்பது எல்லோருக்குமே தெரியும்.

அணு உலையை நம்பித்தான் இந்தியாவே இருப்பது போல இல்லையென்றால் இந்தியாவின் வளர்ச்சியே நின்று விடுமாம். இந்த வளர்ச்சிக்குத்தான் தினமலரும் இதற்காகத்தான் இத்தனை அவதூறுகள் செய்கிறது போல. காவல்துறையும், விமானத்துறையும் மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, இவர்களை வேவு பார்ப்பதும் நாடு வளர்வதற்கா இல்லை அணு நிறுவங்களின் வளர்ச்சிக்கா ? புல்லரிக்கிறது. 




ஜெய்தாபூர் அணு மின்நிலையத்தை எதிர்க்கும், கம்யூனிஸ்டுகள், கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கிறார்கள். கேரள சிபிஎம் தலைவர் அச்சுதானந்தன் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்கிறார். ஆனால் காங்கிரஸின் உம்மன் சண்டி, கேரளத்திற்கு 500 மெகாவாட் கேட்டு நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்.

இதை மற்ற மாநிலத்தவர் எதிர்க்கவில்லையா ? இது பொய் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். கேரளத்தவரும் இணைந்துதான் போரட்டத்தில் இருந்தார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சனையினால்தான் கேரள அறிவாளர்களின் எண்ணிக்கை குறைந்து போனதாக போராட்டக்காரர்கள் சொல்லி வந்தனர். இந்தியா முழுவதும் சிறு அளவிலான போராட்டங்கள் அணு உலைக்கு எதிராகவும், கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நடந்துள்ளன.

எல்லாக் கட்சிகளும் எதிர்க்கின்றன, எந்தக் கட்சியும் ஆதரிக்கவில்லை ஏன் ?

தமிழகத்தில் எல்லா மக்களும் போராட்டத்தில் ஈடுபடவில்லை ஏன் ? 

உதயகுமார் நாட்டுப்பற்றுள்ளவர் எனில், ஏன் இத்தனை நாள் அமெரிக்காவிலிருந்தார் ?

அவர் ஏன் அமெரிக்காவில் இயங்கும் அணு உலைகளை எதிர்க்கவில்லை ?

குழந்தைகளையும் பெண்களையும் அனுப்பி விட்டு, படகில் ஏறித்தப்பினார் ?
சோனியா காந்தியை ஏன் எதிர்க்கவில்லை ?

என்றெல்லாம் அடித்து விடுகிறார்கள். இதெல்லாம் வயித்தெரிச்சலின் விளைவுகள் தவிர வேறொன்றுமில்லை.

வெளிநாட்டிலிருந்தால் அவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லையாம். வெளிநாட்டு அணு உலையை ஆதரிப்பவர்களை தேசத்துரோகிகள் என நாம் சொல்லலாமா ?

அமெரிக்காவிலிருக்கும் அணு உலையை எதிர்ப்பது குறித்து இந்தியர்கள் ஏனப்பா கவலைப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து எதிர்த்தாலே அவதூறுகள் வருகின்றன. இதில் அமெரிக்காவிலிருப்பதை எதிர்க்க வேண்டுமாம்.

அவர் காவல்துறையின் காட்டு மிராண்டித்தனத்துக்கு அஞ்சி, சரணடையவே முன்வந்த அப்பாவி என்பது நமக்குத் தெரியும். போரட்டத்தை வலுவிலக்கச்செய்யத்தான் தேசத்துரோக வழக்குகள், அவர் மீதான அவதூறுகள், என அனைத்தும் நடக்கின்றன. அவர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முன்னால் வந்தால் கைது செய்து விடலாம் அல்லது கொன்று விடலாம் என்பது போலத்தானே திட்டம் போட்டிருக்கிறாரக்ள்

கிறித்தவரான சோனியா காந்தியை எதிர்க்கவில்லையாம் ? இதற்கெல்லாம் பதிலில்லை என்னிடம். ஏன் மற்றவர்கள் கேட்கலாமே கிறித்தவ சோனியா அணு உலைக்கு எதிரானவரா என்று ? ஏன் உதயகுமார், அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படத்தைக் குறித்து விமர்சிக்கவில்லை அதனால் அவர் அமெரிக்க ஆதரவாளர், அவர் ஜப்பானில் அணு குண்டு வீசியதைக் கூட கண்டிக்க வில்லை அதனால் அவர் அமெரிக்கக் கைக்கூலி. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

சீனா இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் பணிகளைத் தொடங்கியபோது, தினமலர்-இந்தியர்கள் என்ன சொன்னார்கள் சீனாக்காரன் வந்துவிட்டான் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது, தென்மாவட்டங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும். உளவு பார்க்கிறது சீனா. எனறெல்லாம் அடித்து விட்டாரகள். அவர்கள் அணு உலையை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படி எதிர்த்திருக்கலாம் தெரியுமா ? இலங்கையிலிருந்து சீனா இந்தியாவைத் தாக்க வேண்டுமென்றால் கூடங்குளம் அணு மின்நிலையத்தை தாக்கி விடும் என்று பீதியைக் கிளப்பியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. சீனாக்காரன் இலங்கையிலிருந்து அல்ல சீனாவிலிருந்தே அடிக்கும் வல்லமை பெற்றவன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அலட்டிக் கொள்ளவில்லை போலிருக்கிறது. போரில் அணு ஆயுதங்களைத்தான் பயன்படுத்தக் கூடாது, ஆனால் அண் மின் நிலையங்களைத் தாக்குவது குறித்து யாரும் பிரச்சனை செய்ய மாட்டாரகள்.

எந்தப் பிரச்சனையாகட்டும் எல்லா மக்களுமே எப்போதும் போராடியதில்லை. கொஞ்சப்பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள், எதிர்நோக்கியிருப்பவர்கள் மட்டுமே போராடுவார்கள், சிலர் எதிர்ப்பார்கள் சிலர் ஆதரிப்பார்கள். முக்கால்வாசிப்பேர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள், அல்லது அவதூறு செய்வார்கள்.

இன்னொரு பெரிய வியாக்கியானம் தொடங்கிய போது யாரும் எதிர்க்கவில்லையாம். 13000 கோடி செலவழித்த பின்னர் எதிர்க்கிறார்களாம்.  அய்யா திட்டம் தொடங்கப்பட்ட போது யாருக்கும் தினத்தந்தி படிக்கும் அறிவு கூட இல்லை. போபால் குற்றவாளி ஆண்டர்சனை தனி விமானம் மூலம் தப்ப வைத்த ராஜீவ் காந்தி இந்தத் திட்டத்தை அறிவித்த போது அக்கால நிலையை நினைத்தல் நலம். பின்தங்கிய மாவட்டதிலிருக்கும் படிப்பறிவில்லாத ஏழைகளிடம் மின் நிலையம் வந்தால், அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று சொன்னால் யார் அதை எதிர்ப்பார்கள். இதுதான் நிலை. செர்னோபில் விபத்து பற்றி எத்தனை பேருக்கு விழிப்புணர்வு இருந்திருக்கும்.

செர்னோபில் அணு உலை வெடித்த போது மொத்தம் 50 பேர் கூட சாகவில்லை. விபத்து நடந்த அன்று 2 பேரும், விபத்து நடந்த வாரத்தில் 28 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் இன்று வரை அதிகம் பேரைப் பலிகொண்ட, புற்று நோய் பாதிப்புகளுடன் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய விபத்து அதுதான். அது போல அணு உலை விபத்து என்றால் வெடிகுண்டு வெடித்து பெரிய பாதிப்பு ஏற்படுவது போல, அல்லது சிவகாசி விபத்து போலவோ, ஹிரோஷிமா போலவோ, போபால் போலவோ அதிக எண்ணிக்கையில் இறப்புக்களோ ஏற்படாது. அது நிலம், நீர், காற்றை நச்சாக்கி மெதுவாக பல உயிர்களைப் பலிவாங்கும். அதனால் விபத்தைக் கண்டு நமக்கு உச் கொட்டக் கூட தேவையிருக்காது. 20 பேர்கள் விபத்தில் செத்தால் 2 நாளைக்கு அதைப் பேசுவார்கள், ஆனால் நாளுக்கு நாள் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளை அது இலட்சத்தைத் தாண்டி விட்ட போதும் கூட யாரும் கண்டு கொள்வதில்லை, அது அவர்களை பாதிப்பதுமில்லை என்பது போல அணு விபத்து நடந்தால் பாதிப்பின் அளவு நமக்குத் தெரியாது. அந்தத் துணிச்சலில்தான் பாதுகாப்பான அணு உலை என்கிறார்கள்.

எதிர்க்கவில்லை என்பவர்களுக்குத் தெரியும். வைக்கோ எதிர்த்துப்பேசியிருக்கிறார். இலங்கையிலிருப்பவர்களும் எதிர்த்தார்கள். தமிழீழப்பிரச்சனையின் காரணமாக அக்குரல் அதிகமாகக் கேட்கவில்லை. இந்தியாவின் பல அறிவாளர்களின் எதிர்ப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. தற்போது கூட ஃபுகிஷிமா வெடிப்பின் பின்னர்தான் அச்சம் பன்மடங்கு உயர்ந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. தொழில்நுட்பத்தில் உச்சம் கண்ட ஜப்பானியரே கையைப் பிசைந்து கொண்டிருக்க, இந்தியர்கள் எல்லாம் அணு விஞ்ஞானிகளே சொல்ல முடியாத அணு உலை பாதுகாப்பானது என்று சொல்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தமிழன் என்றாலும் இனவெறி இனவெறியே !!

கடைசியாக நடந்த ஐபிஎல் போட்டிகளில் இலங்கையின் நுவன் குலசேகரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அதை ஒரு பிரச்சனையாக்காத போது தமிழ்நாட்டில் இது போன்ற குறுகிய இன உணர்வு இனவெறி சார்ந்த அரசியல் நடைபெறாது என நிம்மதியாக இருந்தது.

சிங்கள அரசின் இனவெறி பேசும் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, ராணுவத்தினரோ இந்தியா வருவதை பயிற்சி பெறுவதை எதிர்ப்பதே அரசியல் நடவடிக்கையாகும். அதை விட்டு விட்டு விளையாட வருகிறவர்கள், சாமி கும்பிட வருபவர்களை, பிழைக்க வருகிறவரைத்  துரத்துவது என்ன எழவோ தெரியவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறிய வடிவில் விடிவு வருவதையும் தடுப்பார்கள் தமிழ்நாட்டுப் புலி ஆதரவாளர்கள். இந்தக் கும்பல் மீது இருந்த மதிப்பெல்லாம் போய்விட்டது. பகுத்தறிவு பேசும் பெரியார் திக இயக்கத்தவரே இனவாதிகளைப் போல சில மாதங்களுக்கு முன்பு பைக் பந்தையத்திற்காக கோவை வந்திருந்த சிங்களர்களை ஆர்ப்பாட்டம் நடத்தி வெளியேற்றினர்.

தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேவலத்தை ஏற்படுத்தி விட்டார்கள். வந்தாரை வாழ வைக்கும் சென்னை, விருந்தோம்பலில் சிறந்தவர்கள், பண்பாட்டில் சிறந்தவர்கள் என்றெல்லாம் புகழப்படும் தமிழ்ப் பண்பாட்டினைக் கேவலப்படுத்தி விட்டார்கள் இந்தத் தமிழினப் போராளிகள். இந்தத் தமிழினப் போராளிகள் பேட்டி கொடுக்கும்போது அடிக்கடி சொல்வது ஈழப்போரில் 2 இலட்சம் தமிழர்கள் கொல்ல்பட்டார்களாம். தமிழர்களை அதிகமாக சாகடிப்பது இவர்கள்தான்.

முதலாவதாக தமிழகத்தைப் படாத பாடு படுத்தி வரும் தமிழக முதல்வர், தமிழர்களின் உணர்வுகளை மதித்து, கொழும்பிலிருந்து வந்திருந்த கால்பந்து வீரர்களையும், பயிற்சியாளர்களையும் திருப்பி அனுப்பி, அவர்களை அனுமதித்த ஒருவரை பணிநீக்கம் செய்து தமிழினத்தின் மானம் காத்தார்.

அடுத்து ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே போராடும் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த செயல் வீரர்கள் உட்பட தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் சாமி கும்பிட வந்த சிங்களர்களுக்கெதிராகப் போராடி தமது கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளனர். இவர்கள் போன்ற சிங்கள பக்தர்கள் வழக்கமாக பல வருடங்களாக வருகின்றனர். இப்போது மட்டும் என்ன வந்தது ?

தமிழ்நாட்டிலிருக்கும் ஈழ அகதிகளுக்கே இங்கு சிறையில் இருப்பதைப் போலத்தான் சிரமப்பட்டு வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்களே தப்பி ஆஸ்திரேலியாப் பக்கம் ஓடுகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் காண விழையாமல் இந்த அறிவாளிகள் சாமி கும்பிட வருகிறவன் கால்பந்து விளையாட வருகிறவனையெல்லாம் துரத்தி புறநானூற்று வீரத்தைக் காட்டியுள்ளனர்.

இன்னும் ஒரு கும்பல், பேருந்தில் சென்ற சிங்களர்கள் மீது கற்கள் செருப்புக்களை வீசித் தாக்கியுள்ளனர். 184 பேர்களில் 65 ஆண்கள், 36 குழந்தைகள், 83 பெண்கள். இதில் பெரும்பான்மையினராக இருந்தவர்கள் பெண்களும் குழ்ந்தைகளும்.  இவர்களைத் தாக்கியதன் மூலம் தமிழர்களின் வீரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இந்தக் கயவர்கள் வீசிய கல்லொன்று குழந்தைகள் மீது பட்டுத் தொலைத்து ஒன்று கிடக்க ஒன்று ஆகியிருந்தால் அவ்வளவுதான்
தமிழ்நாட்டின் மானத்தை கிழித்துத் தொங்கவிட்டு இருப்பார்கள். இலங்கையில் இதை வைத்தே தமிழர்களை இன்னும் நொறுக்கியிருப்பார்கள். சிங்களர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்த காவல்துறையினருக்குப் பாராட்டுக்கள்.



கேவலத்திலெல்லாம் கேவலம் அந்த சிங்களர்கள் தமிழில் கதறி அழுததாகும். இதற்கெல்லாம் என்ன சொல்லப்போகிறார்கள் இந்தக் கயவர்கள். ஆக நடப்பவைகளிலிருந்து தெரியவருவது என்னவென்றால் ஈழத்தமிழர்களுக்காகப் போராடுகிறவன் என்பவன் இனவெறியனாகவே இருக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துகிறாரகள்.  இலங்கையில் போர் முடிந்து வெவ்வேறு அரசியல் மாற்றங்கள் வந்து விட்டன. போர்க்குற்றவாளிகளில் ஒருவரான பொன்சேகா பங்காளிச் சண்டையில் சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். இனவெறியர்களே பல பிரிவாக இருக்கின்றனர். பல சிங்கள இனவாத இயக்கங்கள், இனவெறிக்கு எதிரான இயக்கங்கள் அரசுக்கு எதிராகவும் இருக்கின்றன. 

அரசுக்கு எதிராக சிங்கள மாணவர்கள்
தற்போது இந்தியாவின் கொள்கைகள், ஒப்பந்தங்கள் உட்பட தம் வசதிக்காக ஆட்சி நடத்தும் மஹிந்த அரசின் நடவடிக்கைக்கு எதிராக, கல்வித்துறையை பொதுத்துறையிலிருந்து விலக்கி தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிராக சிங்கள மாணவர்கள் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினார்கள். அப்படி இலங்கை அரசின் முயற்சியால் கல்வி தனியார்மயமான பின்னர்தான் தமிழ்நாட்டுக் கல்வி வள்ளல் பச்சை முத்து, இலங்கையில் கடை வைக்க முடிந்தது. துணிச்சலிருந்தால் எஸ் ஆர் எம் நிறுவனரைத் தாக்குங்கள். இப்படியான நிலைகள் அதிகமாகும்போது அதாவது இலங்கை அரசும் இந்தியாவின் பெரிய நிறுவனங்களும் ஒப்பந்தங்கள் போடும்போது, குறிப்பாகத் தமிழ்நாட்டைச்சேர்ந்த தொழில் அதிபர்கள் சிங்களரின் பணம் எனக்கு வேண்டாமென்று நின்று விடுவார்களா என்ன ? . சன் குழுமம் சிங்கள மொழியில் ஒரு அலைவரிசை தொடங்கும் காலம் வராமலா போய்விடும் ?

இலங்கையில் கல்விக் கடை விரித்திருக்கும்  இந்தியாவின் முதல்தரப் பல்கலைக் கழகம்
 ஆனால் இதை சிங்களர்கள் நினைத்திருந்தால், இலங்கையைத் துண்டாட நினைக்கும் தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழனின் பல்கலைக்கழகத்தை இலங்கை மண்ணில் அனுமதிப்பதா என்று இனவெறியைக் கிளப்பியிருக்க முடியாதா ? இதெல்லாம் இந்தத் தமிழ் இனவெறியர்களின் தலையில் ஏறுமா ?

புலம்பெயர்ந்த புலிகள் ஆதரவாளர்கள், புலிகள் இயக்கத்திற்கு நிதி வசூலித்து பல கோடிகளை வைத்திருப்பவர்களே சிங்கள அரசுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக அங்கங்கே செய்திகள் வருகின்றன. அதே நேரம் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்படுவதும், தமிழர்களின் நிலங்கள் இராணுவத்தால் ஆக்ரமிப்பு செய்யப்படுவதும் நடக்கிறது. தற்போது சிறுபான்மை முஸ்லிமக்ளுக்கு எதிராகவும் இனவெறி தூண்டப்பட்டு வருகின்றது.

என்னவோ எல்லா சிங்களர்களும் தமிழர்களைக் கொல்லும் வெறியோடு இருப்பது போலவும்தான் இவர்கள் நடந்து கொள்கிறார்கள். அரசும், இனவெறியர்களும், அரசியல்வாதிகளும் செய்வதற்கு பொது மக்கள் என்ன செய்வார்கள். சில மாதங்கள் முன்பு வங்கியைக் கொள்ளையடித்து விட்டதாகக் கூறி அம்மா அவர்களின் காவல்துறை 5 பிஹாரிகளைக் சுட்டுக் கொன்று தள்ளியது. இதனால் பிகார் மாநிலம் அதிர்ச்சியில் உறைந்தது. அதை அவர்கள் தமிழ்நாட்டுக்காரன் என்றால் கொலைகாரன் என்று மொத்தத் தமிழர்களையும் வெறுத்து ஒதுக்கினால் அதை நாம் ஏற்றுக் கொள்வோமா ?

28 வருடங்கள் முன்பு சிங்களப் பேரினவாதிகளால கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் சரி, 4 வருடங்களுக்கு முன்பு போர் உச்சத்திலிருந்த போதும் சரி இனவெறி இல்லாத சிங்களர்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்தார்கள், உயிருக்குப் பாதுகாப்பும் அளித்தார்கள். அதிகமான தமிழர்கள் சிங்களர்ளுடன் கலவர அச்சம் இன்றியே இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அதே நேரம் அரசியலில் இல்லாத அப்பாவி சிங்களர்கள் தமிழ் விடுதலை இயக்கங்களால் கொல்ல்பட்ட நிகழ்வுகளும் உண்டு. 50 ஆயிரம் தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கை அரசுதான் 30 வருடங்களுக்கும் முன்பும் ஜேவிபி போராட்டத்தை அழிப்பதற்காக 60 ஆயிரம் சிங்களர்களைக் கொன்றது.

தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தமிழக அரசுக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்து நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதாராண உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. இந்த லட்சணத்தில் தமிழீழம், தனித் தமிழ்நாடு என்று காலத்திற்கொவ்வாத கருத்துக்களெல்லாம் விவாதிக்கப்படுகின்றன.

ஒரிரு வருடங்களுக்கு முன்பு தெலுங்கானப் போராட்டம் வெடிந்திருந்தது. அதன் காரணமாக ராகுல் காந்தி தெலுங்கானா தனி மாநிலமாக்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சிதம்பரமும் இது குறித்து கருத்துக்கள் பகிர்ந்திருந்தார். இதைக் கண்டித்து ஆந்திராவிலிருந்த தெலுங்கானாவுக்கு எதிரான கட்சியைச் சேர்ந்த அமைச்சரொருவர் குறிப்பிட்டார். சிதம்பரம் என்ற தமிழர் ஆந்திராவைத் துண்டாட முயற்சிக்கிறார், அவர் வேண்டுமென்றால் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கட்டும் என்றார். இனவாத அரசியல் என்பது
இதுதான். மக்களிடம் ஏற்கெனவே ஒற்றுமை இருக்கிறது இது போன்ற இனவாதிகள் இனவெறியர்கள்தான் திட்டமிட்டு அதை பிரிக்கிறார்கள்.

மதவெறி, தேசியவெறி, இனவெறி, ஜாதிவெறி என எல்லாமே அது சார்ந்த பொது மக்கள் அனைவரையும் எதிரியாகக் கருத வைக்கிறது. இது போன்ற இன்வெறியை நாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். உண்மையான மக்கள் சாரந்த போராட்டங்களை ஆதரிப்போம். தமிழின வெறிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். இனத்தை விட மனிதம் பெரியது. இதே இலங்கையில் தமிழர்கள் இடத்தில் சிறுபான்மையினராக சிங்களரும், பெரும்பான்மையினராக தமிழர்களும் இருந்திருந்தால் நான் சிங்களர்களைத்தான் ஆதரித்திருப்பேன். அதுதான் நேர்மையாக இருக்க முடியும். 

இது மாதிரியான செயல்கள் சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு பயன்படுமே ஒழிய இலங்கைத் தமிழர்களுக்குப் பயன்படாது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment