சிங்களப் பௌத்த பேரினவாதிகளால் தகர்க்கப்படும் இசுலாமிய வழிபாட்டிடங்கள் !

1915 - இல் முதன்முதலில் சிங்களப்பேரினவாதிகளால் இழப்பைச் சந்தித்தவர்கள் இசுலாமியர். தற்போது இனவாத அரசியலின் இலட்சக் கணக்கானோர் கொலை செய்யப்பட்ட பின்பும் சிங்களப் பேரினவாதமானது பல வடிவங்களிலும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறது. அவ்வகையில் இசுலாமியப் பள்ளிவாசல்கள் புத்தமதப் பிக்குகளால் தகர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிங்களப் பௌத்தப்பேரினவாதம் அரசின் மறைமுக ஆதரவு மற்றும் தூண்டுதலினால் மீண்டும் தனது கொடுங்கரங்களை நீட்டத் தொடங்கியுள்ளது. இப்படி பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை இசுலாமியரின் மீது தனது தாக்குதலைத் தொடுக்கும் அதே வேளையில் தமிழ் முசுலிம்களை இன்னொரு சிறுபான்மையினரான தமிழரிடமிருந்து பிரிக்கும் அரசியலையும் செய்து வருகிறது. சிங்களப் பேரினவாத அரசியலின் ஒரு பகுதியாக முஸ்லிம் தமிழர் பிரிவினையைத் தூண்டும் வேலையைச் செய்கிறது.

போர் முடிந்து 3 ஆண்டுகளான பின்பும் போர்க்காலத்திருந்த அடக்குமுறைகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்னும் வெள்ளை வேன்களில் அரசுக்கு எதிரானவர்கள் கடத்தப்படுகின்றனர். அரசின் கைப்பாவைகளாக இருக்கும் ஆட்சியாளர்கள் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். புலிகள் அழிக்கப்பட்ட பின்பு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது இருப்பினும் எதிர்பார்த்தபடியே எந்தத் தீர்வையும் இதுவரை வழங்கவில்லை. போதாக்குறைக்கு உலக நாடுகளிலிருந்து அழுத்தம் போர்க்குற்ற விசாரணை என பல வகையிலும் அச்சுறுத்தல். முன்பு விடுதலைப் புலிகள் இருந்த பொதோ அவர்களைக் காரணம் காட்டியே எல்ல செயலையும் நியாயப்படுத்தி வந்த சிங்கள அரசு தற்போது தனது பித்தலாட்டங்களுக்கு காரணம் காட்ட ஒரு எதிரி இல்லாமல் தவிக்கிறது. புலிகளின் முடிவின் பின்னரே மகிந்தவின் குடும்ப அரசு தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர், முஸ்லிம் என அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தனது ஒடுக்குமுறையைத் தொடங்கிவிட்டது. அதன் விளைவாகத்தான் போர்க்காலத்தில் இருந்தது போலவே பத்திரிக்கையாளர், அரச எதிர்ப்பாளர்கள் காணாமல் போதல் என்ற செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. மகிந்தவுக்கு எதிரான மனப்பான்மை வலுத்து வருகிறது.

இத்தனை பிரச்சனைகளையும் சமாளிக்க ஒரே வழி மக்களை ஒன்று படாமல் பிரித்து வைத்திருப்பதுதான். இதற்காக சிங்களப் பேரின பௌத்தமதவாத வழியில் செயல்பட்டு வருகிறது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களான மாவீரர் கல்லறைகளை அழித்தது போன்ற செயல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையினர் வாழிடங்கள் வழிபாட்டிடங்கள் மீதான கலாச்சார அழிப்பு மற்றும் பேரினவாத விரிவாக்கம் போன்றவற்றைச் செய்கிறது. இதன் விளைவாகத்தான் புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி வருகிறது. புத்தர் சிலைகளை நிறுவும் இராணுவம் !! என்ன ஒரு முரண் நகை. இன ஒற்றுமை நிலவும் இடங்களில் அதாவது சிறுபானமை தமிழர்கள் முஸ்லிம்களின் இடங்களில் இதை செய்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் முஸ்லிம்களின் வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு புத்த மதப் பிக்குகளே தலைமை தாங்கியுள்ளனர். இத்தனைக்கும் முஸ்லிம்களின் சார்பாக அவர்களை பிரதிநிதிப்படுத்த மகிந்தவின் ஆதரவாளராக சில முஸ்லிம் தலைவர்களும் உள்ளனர். அவர்கள் இப்போது மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளனர். புலிகள் மீதான போர்களின் போது கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆயிரக் கணக்கான தேவாலயங்களும், கோவில்களும் இடிக்கப்பட்டன. தற்போது அரசே பல்வேறு வகையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை, தர்காக்களை இடிக்கிறது. 


அரசின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளாக தம்புல்லவில் பள்ளி வாசல் புத்த பிக்குகளால் தாக்கப்பட்டது, பின்பு அரசு அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அனுராதபுரத்தில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட செயலில் அரசுதான் காரணம் என்ற வதந்தியும் இருக்கிறது, காத்தான்குடியிலும் ஒரு மசூதி கொளுத்தப்பட்டுள்ளது.



தம்புள்ள பள்ளிவாசல் தகர்க்கப்படும்போது அங்கிருந்த காவலர்கள் அதைத் தடுக்கவில்லை, 2000 பேர்கள் வரையிலான கும்பல் புத்த பிக்குகளின் தலைமையில் வந்து இதை அரங்கேற்றியுள்ளது. பட்டப்பகலில் தொழுகை நடக்கும்போதே இது நடந்துள்ளது,
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தற்கொலையை நோக்கித் தள்ளப்படும் தமிழ்வழி மாணவர்கள் - ஆங்கில வழியில் படிப்பது தவறா ?

சமீபத்தில் நடந்த இரு தற்கொலைகள் நடந்தன. அது வெளிச்சம் பெற்றதற்குக் காரணம் தற்கொலை செய்து கொண்ட இருவரும் அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள். எவ்வளவு சூடாக வெளிவந்ததோ அதே வேகத்துடன் மறக்கப்பட்டும் விட்டது. 

இவ்விரு தற்கொலைகள் என்னை அதிகமாக பாதிக்கக் காரணம் தமிழ்வழியில் படித்ததால் கல்லூரியில் படிக்க முடியவில்லை என்று தற்கொலை செய்தவர்கள்; இவ்விருவருமே நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந்ததினால்தான் மாநிலத்திலேயே முதல் நிலையிலிருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றார்கள். அவர்கள் தற்கொலைக்குக் காரணமாக சொல்லப்படும் காரணங்களில்  அவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள், அதனால் ஆங்கிலப்புலமை குறைவு காரணமாக கல்வியை சரியாகக் கற்க முடியாமலும், சக மாணவர்களின் கிண்டலினாலும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதே என்னை மிகவும் பாதித்தது, காரணம் நானும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டு தோற்றிருக்கிறேன். 

மேலும் இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜோதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார் அவருக்கும் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதால் ஆங்கிலத்தில் படிக்க சிரமம் என்பதை ஒரு காரணமாக சொன்னார்கள். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.  காதல் தோல்வி, பகடி வதை (Ragging) போன்ற காரணங்களும் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மூவர்

முதலில் வருபவர் இரு வருடங்கள் முன்பு தற்கொலை செய்து கொண்ட ஜோதி.  அவர் எடுத்த மதிப்பெண்கள்

10 (S.S.L.C) - 475/500 

12 (H.S.L.C) - 1115/1200 
ஜோதி
அடுத்ததாக மணிவண்ணன்.  இவர் தனித்துவமான ஒரு மாணவராக இருந்திருக்கிறார். அவரைப்பற்றித் தெரிந்து கொள்ள இதைப் படிக்கவும். 10 வதில் 461 மதிப்பெண்கள். +2 வில் 1159. ஆனால் மூன்று வருடங்களில் பொறியியலில் 26 பாடங்களில் அரியர் வைத்திருந்திருக்கிறார்.  



மூன்றாவது தைரிய லக்ஷ்மி என்ற மாணவி எடுத்த மதிப்பெண்கள் குறித்த செய்திகள் எனக்குத் தெரியவில்லை. அவர் எழுதிய கடிதம்   அவரது பிரச்சனையைச் சொல்கிறது. அவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிப்பவர் என்பதால் எப்படியும் 1100 க்கும் மேல் எடுத்திருப்பார்.

     
       
 இதில் முதல் இருவருமே வழக்கமாக நாம் கேள்விப்படும் சிரமம் நிறைந்த 
பின்புலம், வறுமை எனபனவற்றைத் தாண்டி தமது கல்வியில் சிறந்து 
விளங்கினார்கள். குறிப்பாக மணிவண்ணன். +2 வில் 1167 என்பதெல்லாம் சராசரி மாணவர்களால் முடியவே முடியாது. மனப்பாடம் செய்தாலும் முடியாது.

இவர்கள் மூவரின் தற்கொலைகளுக்கும்
காதல் தோல்வி, குடும்பப் பிரச்சனை, பகடி வதை என்று சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழ்வழியில் படித்ததால்தான் தாழ்வு மனப்பான்மையாலும் கல்வி குறித்த அச்சத்தினாலும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. எனவே அக்காரணத்தை முன்னிலைப்படுத்தி எழுதுகிறேன். கிராமப்புறத்திலிருந்து சென்ற இவர்களுக்கு சென்னை கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கும்.

சரி இப்போது தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் கல்லூரியில் எதிர்கொள்ளும் பிரச்சனை என்று பேசத் தொடங்கினால் வரும் கருத்துக்கள்

1. தாய்மொழியில் படிப்பதுதான் அறிவு வளர வழிவகுக்கும், எல்லாத் துறையிலும் சிறந்து விளங்குகிறவர்கள் அனைவரும் தமது பள்ளிக் கல்வியை தாய்மொழியில் கற்றவ
ர்களே

2. ஆங்கிலம் எனபது அறிவின் அடிப்படையல்ல வெறும் மொழி மட்டுமே

3. துறை சார்ந்த அறிவு இருந்தால் போதும் ஆங்கில அறிவு அவசியமன்று

4. ஆங்கில வழியில் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல.

5. நான் தமிழ்வழியில்தான் படித்தேன், கல்லூரியில் ஆங்கில வழியில் படித்தவர்களை விட நான்தான் அதிக மதிப்பெண் பெற்றேன்.

இப்படியாக பல கருத்துக்கள் வருகின்றன. அடுத்ததாக ஆங்கில வழி குறித்த விமர்சனமாக வருகின்றன

1. பெற்றோர்களின் ஆங்கில மோகம்

2. ஆங்கிலம் மேன்மைபடுத்தப்பட்டு தமிழைத் தாழ்வு படுத்துகிறது

3. ஆங்கில வழியில் படித்தவர்களை விட தமிழ் வழியில் படித்தவர்கள் தெளிவானவர்கள்

4. ஆங்கில வழியில் படித்தவர்கள் தெளிவில்லாதவர்கள், மனப்பாடம் செய்து வாந்தியெடுப்பவர்கள்


5. அவர்களுக்கும் ஆங்கிலம் சரியாகத் தெரியாது

இப்படியாக பலவிதமான கருத்துக்கள். முதலிலிருந்து வருகிறேன். சுருக்கமாக இக்கருத்துக்கள் யாரைச் சார்ந்து இருக்கின்றன என்று பார்த்தால் ஆங்கில வழியில் படித்த சராசரி மாணவர்களையும், தமிழ் வழியில் படித்த சிறந்து விளங்கும் மாணவர்களையும் ஒப்பிட்டது போல இருக்கிறது. ஆங்கில வழியில் படித்த சிறந்த மாணவர்களையும், தமிழ் வழியில் படித்த சராசரி மாணவர்களையும் இதே போல் ஒப்பிட்டுப் பார்த்தால் மேலே சொன்ன கருத்துக்கள் அத்தனையும் மாறி விடும்.


 முதல் கருத்து, தாய்மொழியில் படித்து அறிவு பெற்று பின்பு ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே அதிகம் என்பது, இதில் ஒரு வகுப்பில் 40 பேர் இருக்கிறார்கள் எனில், அதில் 5 பேர் மட்டுமே சிறந்த மாணவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கழித்துக் கட்டப்படுகிறாரகள். இதில் தமிழ் வழியாக இருக்கும் பட்சத்தில் அந்த 5 பேரில் ஒருவர் திணறி விடுவார். மேலே தற்கொலை செய்து கொண்டவர்களின் மதிப்பெண்களைப் பாருங்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்களே இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, சராசரி மாணவரகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். ஆனால் சிலர் மிக எளிதாக அதை எதிர்கொண்டு பழகி விடுகிறார்கள் பெரும்பான்மையினரால் அது முடிவதில்லை. யாராவது நான் தமிழ்வழியில் படித்தேன் இப்போது எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நான் நிபுணத்துவம் பெற்று விட்டேன் என்றால் மகிழ்ச்சி வாழ்த்துக்கள். எனக்கு வெற்றி பெற்றவர்கள் குறித்துப் பிரச்சனையில்லை. இதைப் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். தோல்வியடைபவர்கள் குறித்தே கவலை. மீதப்பேர்கள் உங்களைப்போல் வெற்றி பெற முடியாததற்கு ஆங்கிலப் போதாமைதான் காரணம். எத்தனை பேர் பொறியியல் படிக்கிறார்கள் வெளிவருகிறவர்கள் முக்கால்வாசிப்பேர் தகுதிக் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள் அதற்கு ஒரு காரணம் இந்த எழவெடுத்த ஆங்கிலம்.

ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமே என்பதற்குப் பதில்: அந்த வெறும் மொழி நமக்குத் தெரியவில்லை என்பதுதான் இங்கு பிரச்சனை. ஆங்கிலம் என்பது ஒரு மொழி. ஆனால் நம் கல்விமுறை அதை மொழியாகக் கற்பிப்பதில்லை. அதை ஒரு பாடமாகத்தான் கற்பிக்கிறது. கட்டுரைகள், மனப்பாடக் கவிதைகள் இரண்டையுமே தமிழ் வழி மாணவர்கள் மனப்பாடம் செய்துதான் எழுத வேண்டியுள்ளது. அதனால் மொழியறிவு என்பது தமிழ் வழி மாணவர்க்கு இன்னும் தொலைவிலிருக்கிறது. மேலும் ஒரு மொழியைக் கற்க வேண்டுமெனில் முதலில் அதில் நான் பேசுவதற்கும், கேட்டுப் புரிந்து கொள்வதற்கும் ஏற்கெனவே அதிகம் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். நமக்கு அந்த வாய்ப்பில்லை. ஆங்கில வழியில் படிப்பவர்கள் குறைந்த பட்சமாக மொழியுடன் 10 வருடங்களாக அறிமுகமிருப்பதால் கல்லூரிக்குச் செல்லும் போது பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை. ஒரு மொழியைக் கற்க வயது தடையில்லை. ஆனால் எப்போது மொழியைக் கற்பது 17 வயது வரை உயர்நிலைக் கல்வி கற்று பின்பு தொழிற்கல்வி கற்கும்போதா ? சரி மொழியைக் கற்பதா இல்லை பாடத்தைக் கற்பதா ? கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் எழுதிய தடியான நூல்களை நாம் கற்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும் அதை செய்ய அதிகப் படியான ஆங்கிலப் புலமை வேண்டும், இந்த நேரத்தில் உட்கார்ந்து ஆங்கிலத்தை எங்கே கற்பது ?

துறை சார்ந்த அறிவு போதும் ஆங்கில அறிவு அவசியமன்று என்பது ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக கணிதம், கணிணி அறிவியல்,  தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் போன்ற துறைகள், ஓரளவுக்கு மொழிப்புலமை அவசியப்படாதவை. மேலும் துறைசார்ந்த அறிவுடன் ஆங்கிலப்புலமையும் சேர்ந்து  இருப்பவர்தான் துறை சார்ந்த அறிவுமட்டும் கொண்டவரை விடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். மருத்துவம், அறிவியல் துறைகள் இதில் சேராது. இதில் படிப்பவர்கள் நிச்சயம் திணறுவார்கள்.

பெற்றோர்களின் ஆங்கில மோகம் என்பது மிகப்பெரும் பொய். இதை எல்லோரும் அடிக்கடி சொல்கிறார்கள். இது அறியாமையா இல்லை அயோக்கியத்தனமா ? "என்னை ஏன் ஆங்கில வழியில் சேர்க்கவில்லை? " என்று நான் இன்னும்கூட அப்பாவிடமும் உறவினரிடமும் கேட்பதுண்டு. நான் கல்லூரியில் சேர்ந்தபின்பு பட்ட அவதியினால், நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் சொல்வது இதையே "தயவு செஞ்சு குழந்தையை தமிழ் வழியில் சேர்த்து விடாதீர்கள்". 


பெற்றோர்கள் என்பவர்கள் யார் ? கல்வி கிடைக்கப்பெறாதவர்கள். தம் குழந்தைகளாவது நன்றாக வரட்டும் என்றுதானே ஆங்கில வழியில் சேர்க்க அலைகிறார்கள். தனியார் பள்ளிகளில் தரம் அதிகம் என்று நம்புவது பிழைதானென்றாலும் அதற்கு அவர்கள் மட்டுமே காரணமா ? கல்வி அளிப்பதிலிருந்து அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டது, தனியார் பள்ளிகள் ஊர்தோறும் கட்டப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் இலட்சணம் அனைவருக்குக்குமே தெரியும். அரசுப் பள்ளி ஆசிரியர்களே கூட அங்கு தமது பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்புவதில்லை. பெற்றோர் தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் சேர்ப்பது ஆங்கில மோகத்தினாலல்ல, அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையினால்தான் இதை என்னவோ வரதட்சிணை கேட்கும் பெற்றோரின் பேராசை, குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கும் மாயையைப் போல் சித்தரிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இன்னொன்று தமிழ்ச் சூழலில் தமிழ் குறித்த எதுவுமே உணர்ச்சிகரமாக மாறிவிடுகிறது. தமிழ் வழிக்கல்வி குறித்த விவாதமும்தான். தமிழில் பேசுவது இழிவு ஆங்கிலம் பேசுவது உயர்வு என்பது மாயை என்ற கருத்தை பாமரர்களிலிருந்து மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயர்தான் வைப்பேன் என்று அடம் பிடித்த கமல் வரை எல்லோரும் கூறுகிறார்கள். வெத்து பந்தாவுக்கு சிலர் பேசிக் கொள்வதை வேண்டுமானால் இதற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வேலைவாய்ப்பு முகாம், நேர்காணல் என்று எங்கு போனாலும் ஆங்கிலமே அடிப்படை, ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதையே முதல் தகுதியாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கௌரவக் குறைச்சல். பெருமை என்பதைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் ஆங்கிலப் புலமை அடிப்படைத் தகுதிகளில் ஒன்று என்று விளங்கும். தமிழில் பேசவேண்டும் என்பது மற்ற துறைகளில் இருக்கும் தமிழின் அளவுதான் சமூகத்திலும் எதிரொளிக்கும். இதை ஊடகம் கலைத்துறை, கல்வித்துறை என அனைத்திலும் தமிழ் மகுடம் சூடும்போது நிகழும் அதை விட்டு தனிப்பட்ட நபரின் தவறாகப் பார்ப்பது எவ்வகையிலும் உதவாது. மாறாக எதிரிவிளைவையே ஏற்படுத்தும். தமிழில் பேசு என்று கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடும் அல்லது வேலை கிடைக்காத இளைஞனிடம் சொல்வதற்கு  என்ன நேர்மை இருக்கிறது. இதை அவர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தைக் கேளுங்கள் தமிழ் வழியில் பயின்றதற்காக வருந்துகிறீர்களா இல்லை பெருமப் படுகிறீர்களா என்று. முதலில் நம் தமிழகம் ஒன்றும் ஜப்பானோ, ஃப்ரான்சோ, ஜெர்மனியோ அல்ல. குறைந்த பட்சம் ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசால் வழங்கப்பட்ட உரிமைகளைக் கூட இங்கு சாதிக்க வில்லை என்பது கசப்பான உண்மை. அங்கு மருத்துவமே தமிழில் கற்பிக்கப்படுகிறது என்றும் கேள்விப்பட்டேன். இங்கு பொறியியல் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்கிலத்தில் கற்பவர்களுடன் ஒப்பிடும்போது அதன் தரம் குறித்து எனக்கு மனநிறைவில்லை. நேர்காணல் என்று வரும்போது முதல் சுற்றிலேயே தமிழ் வழி மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள். தற்பொது தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு படித்து முடித்துவிட்டு வந்து வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. 

சற்றே சிந்தித்தால் விளங்கும், நீல நிற பாவாடை தாவணிகளும், காக்கிக் கால் சட்டையும், வெள்ளைச் சட்டையும் கொண்ட அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், நகர்ப்புறங்களில் கழுத்துபட்டை இறுக்க வாகனங்களில் செல்லும் வெள்ளைத் தோல் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஆங்கிலக் கல்வியும் சம அறிவைக் கொண்டதென்றா கருத முடியும் ? இதில் ஆங்கில வழியிலேயே
ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்சி என பல வகைகள் இருக்கின்றன. சமச்சீர் கல்வியும் மிகவும் எளிமையாக உள்ளதாகவே புலம்புகிறார்கள்.

தமிழகம் இந்தியாவின் அடிமை. இந்தியா அமெரிக்காவிற்கு அடிமை. இங்கு ஆங்கிலம்தான் சோறு போடும். தமிழ் வழியில் கற்று விட்டு கல்லூரியில் சென்று அவர்கள் படும் சிரமங்கள் எத்தனை என்று அவர்களுக்குத்
தான் தெரியும். நேர்காணலில் பட்ட அவமானங்கள் அவர்களுக்கு தமிழ் மீதான வெறுப்பைத்தான்  வரவழைத்திருக்கும். தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை, ஆங்கில எழுத்துக்கள் தார்பூசி அழிப்பது என்பதெல்லாம் எள்ளி நகையாடப் பட வேண்டியவை. தமிழை வளர்க்கும் ஆக்கப்பூர்வமான வழிகள் ஆயிரம் இருக்கின்றன. குறைந்த பட்சம் கல்வித் துறையில் தமிழ் மொழியைப் படித்தவர்க்காவது வேலை வாய்ப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பணிகள், கல்லூரிகளில் தமிழில் இல்லை பின்பு பள்ளியில் மட்டுமே தமிழில் கல்வியை வைப்பது யாருக்காக. தமிழ் வழியில் படிப்பவர்க்கு ஆங்கிலம் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் கல்லூரியில் அல்ல, மூன்றாம் வகுப்பிலிருந்தே. இதெல்லாம் நடக்கவா போகிறது. அதற்கு முதலில் கல்வி முழுமையுமே அரசாங்கத்தின் பொறுப்பில் வர வேண்டும். தரமான சமமான இலவசக் கல்வி அனைவருக்கும் கற்பிக்கப் பட வேண்டுமென்பதே என நிலைப்பாடு. என்னுடைய வலைப்பூவின் பெயரும், புனைப்பெயருமே என்னுடைய தமிழ் ஆர்வக்கோளாறுக்குச் சான்று பகரும்மென்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய சொந்த அனுபவத்தில் எனக்கு ஆங்கிலப் போதாமைதான் எதிரி, எனக்கு  விருப்பமான துறையில், வெற்றி பெற முடியாமல் கல்வியைக் கூட முறையாகக் கற்க விடாமல் செய்தது.  எனவே என் குழந்தையை தமிழ் வழியில் கல்வி கற்க வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. தமிழ் பெயர் வைப்பது தமிழைக் கற்பிப்பது, தமிழுணர்வு ஊட்டுவது என்பதெல்லாம் இதில் சேராது. இது சரிதானென்று எல்லோர்க்கும் என்னால் பரிந்துரைக்கவும் முடியவில்லை. யாராவது தமிழ் வழியில் சேர்க்க விரும்பினால் வாழ்த்துக்கள் !! அக்குழந்தை தமிழ் வழியில் கற்று நிபுணத்துவம் பெற்றால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலையில் இடம் பெற்றுப் படிக்க முடியாமல் தற்கொலைகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு கல்வி இருக்கின்றதென்றால் இன்னும் பல ஆயிரக் கணக்கான பள்ளி கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நினைத்துப் பார்த்தால் புரியும் இது எவ்வளவு பெரிய பிரச்சனை என்று. தற்கொலை செய்தவர்கள் கோழைகளல்ல பலிகள். நான் தமிழ் வழிக்கல்விக்கு ஆதரவளிக்க மாட்டேன்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தேர்வில் காப்பியடித்தலும் சுயவிமர்சனமும்

திருவண்ணாமலையில் ஒரு பள்ளியில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு பிட் வழங்கிக் கொண்டிருந்த போது பிடித்து விட்டார்கள். பள்ளியிலுள்ள நகலெடுக்கும் இயந்திரத்திலேயே தயாரிக்கப்பட்ட துண்டுக் காகிதங்களுடன். இதென்ன பெரிய செய்தியா ?. நிறைய இடங்களில் நடப்பதுதானென்றாலும் கேள்விப்படுபவர்களுக்கு புதிதெனில் அதிர்ச்சியும் உண்டாகும். இதைக் கேட்டு ஆத்திரப்படக்கூடும். அந்த ஆசிரியர்களைத் திட்டக் கூடும். எப்பாடு பட்டாவது அனைத்து மாணவர்களையும் தேர்வில் வெற்றி பெறச் செய்யாவிட்டால் பள்ளி நிர்வாகம் அவர்களை ஒரு வழியாக்கி விடும். 100% தேர்ச்சி அடையும் பள்ளி என விளம்பரம் செய்து நன்கொடை வாங்க முடியாது. வாங்கும் சில ஆயிரம் சம்பளத்துக்கு வருடம் முழுவதும் கத்தினாலும் மண்டையில் ஏறாத மரமண்டைகளை என்ன செய்வதாம் ? வருடம் முழுவதும் திட்டினாலும் தேர்வு நேரத்தில்தான் இது போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெய்வமாகத் தெரிவார்கள். அவர்கள் தன்மானத்தை விட்டு பிட்டுக் கொண்டு வந்து தராவிட்டால் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பேர் முக்காட்டைப் போட்டிருப்போம். 

அந்த எழவை மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதால் என்ன அறிவு வரப்போகிறது ? என்ன படித்தாலும் கல்லூரியில் படிக்கப் போவதற்கும் அல்லது வேலை கிடைத்துப் போனாலும் அல்லது எதிர்கால வாழ்க்கையிலும் அது என்ன வகையில் பயன்படப் போகிறது அந்த ஏட்டு படிப்பு ? என்ன படித்தாலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கவே விரும்புகிறார்கள். இல்லையென்றால் சேவைத்துறை அதற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பு மட்டும் தேவை. பிறகு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்கள் ? தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை வேறு செய்கிறார்கள். பிட்டடித்து சிக்கினாலும் தற்கொலை முயற்சி. தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு, புறக்கணிப்பு என எதிர்கொள்ள நேரிடும். பணம் கொடுத்தால்தான் கல்வி, மனப்பாடம் செய்து எழுதினால் மதிப்பெண், etc கிடைக்கும் உலகில் பிட்டடித்து தேறிட எண்ணுவது இயல்புதான்.

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் சுமாராகப் படிப்பேன். தேர்வு எழுதும் போது வருகின்ற கண்காணிப்பாளர் கொஞ்சம் பெரிய மனதுக்காரராக இருந்தால் எழுதி முடித்த தாளை தேர்வு அறையிலேயே பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது வழக்கம். ஒரு அறையில் ஒருவர் இருவர் நன்றாகப் படிப்பவராக இருந்தால் போதும். ஒரு மதிப்பெண் வினாக்கள் எப்படியாவது ஏறக்குறைய அனைத்து விடைகளும் சரியாக கண்டு பிடிக்கப்பட்டு பரிமாறப்படும். முடிந்தால் எல்லாருக்கும் விடைத்தாளை அனுப்பி அனைவரும் எழுதியவுடன் திரும்ப கைக்கு வந்து விடும். 10 ஆம் வகுப்பில் அறிவியல்தான் மிகவும் சிரமாமானது 12 வருடங்களுக்கும் முன்பாக. கேள்வித்தாளை வாங்கியவுடன் எல்லோருக்கும் கிழிந்து விட்டது. மிகவும் கடினமாக இருந்தது. (நான் வழக்கமாக 80 மதிப்பெண் வாங்கியது கூட இல்லை. ஆனால் 90 க்கும் மேலாக பொதுத்தேர்வில் எடுக்க வேண்டுமென சூளுரை எடுத்திருந்தேன் அது முடியாது எனத் தெரிந்தும்) எனக்கு ஒரு 60 வரை மட்டுமே வரும் என்று புரிந்தது. மற்றவர்க்கோ 30 கூட வராது. பிற்பாடு துண்டுக்காகிதங்களில் விடையை எழுதி அனுப்பி வைத்து ஆசிரியர்கள் மற்ற தேர்வில்லாத மாணவர்கள் உதவினார்கள். எனது தாளை வாங்கியெழுதிய நண்பன் மிகவும் சென்டிமென்டாக எனது புகைப்படத்தை வாங்கியும் வைத்துக் கொண்டான். 10 ஆவது படிக்கும் போது 10 வகுப்பு பொதுத்தேர்வுதான் உலகமகா சிரமம் என்று நினைப்பது இயல்புதானே. (இப்போது ஒரு பதிவு எழுதி பின்னூட்டம் வாங்குவது சிரமம்) எனக்கோ சிரிப்பாக இருந்தது.

அடுத்து பிட்டை தேர்வறைக்கு எடுத்துச் செல்லும் நுட்பம்தான். உள்ளாடை, உள் பாக்கெட் எனப் பலவகையில் எடுத்துச் செல்வோம். சிலர் பேண்ட்டில் காலின் உள்புறமாக தொடைப்பகுதியில் தையல் இருக்குமல்லவா அங்கே ஒரு 7 செமீ அளவு கிழித்து விட்டு உள்ளாக ஒரு பாக்கெட்டைத் தைத்து அதில் அள்ளிக் கொண்டு போனார்கள். சிலர் தேர்வு அறைக்குள்ளேயே முதல் நாளிலேயே சென்று தமது இருக்கையின் கீழாக் கத்தையாக செல்லே டேப்பைக் கொண்டு ஒட்டினார்கள். எனக்கு பிட்டடுக்கும் அளவு துணிச்சல் கிடையாது. சிறு குற்ற உணர்வும் உண்டு. கண்காணிப்பாளர் கண்டிப்பாக இல்லாத பட்சத்தில் ஒரு சில முறை செய்தேன். மற்ற எல்லாப் பாடங்களிலும் ஏறக்குறைய 70 % வரை மதிப்பெண்கள் பெற முடிந்த என்னால் கணிதத்தில் தேறுவதே மிகவும் சிரமம். நல்ல வேளையாக என்னுடைய நண்பி நான் எட்டிப் பார்த்து எழுதும் தொலைவில் இருந்தாள். அவள் புண்ணியத்தில்தான் நான் பிழைத்தேன். இல்லையென்றால் கூவியிருக்கும். அந்தக் கணிதத்திற்குத்தான் நான் (இன்னொரு நண்பனும்) பிட் கொண்டு சென்றது நல்ல வேளையாக அந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். அதற்கு முன்பு ஒரு முறை பிட் எடுத்துச் சென்று தேர்வு அறைக்கு நுழையும் முன்பாகவே வெளியே வீசி விட்டேன். வீரம்தான் !!

இன்னுமிரண்டு நண்பர்கள் வேறொரு தேர்வு அறையில் நடந்த நிகழ்வு இது. தமது விடைத்தாளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் எழுதிய விடையை மற்றவன் பார்த்து எழுதிக் கொள்வது. ஒருவர் முதலில் 2 மதிப்பெண் வினாக்களும், மற்றவர் 1 மதிப்பெண் அல்லது 5 மதிப்பெண் வினாக்களையும் எழுதுவது (சரியான விடைகள்தான் துண்டுக் காகிதங்களைப் பார்த்துத்தான், ஒரு அறையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்த்து எழுத அனுமதிப்பார்கள் கண்காணிப்பாளர்கள் அதற்கு மேல அவர்களுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்) பின்பு அவருக்கே தெரியாமல் நாங்களாக நுட்பமாக எழுதிக் கொள்ள வேண்டும்). இப்படியாக இருக்கும்போது விடைத்தாளை மாற்றிக் கொண்டவர்கள் இரண்டு பேர். இதில் விடைத்தாளைக் கொடுத்தவனும் மறந்து விட்டான், வாங்கியவனும் மறந்து விட்டான். பறக்கும் படை வந்தால் எப்போதும் ஏதாவது ஒரு அறையில் இருக்கும் ஒரு சிலரின் விடைத்தாளை வாங்கி ஆய்வு செய்வார்கள், ஏதேனும் மாற்றிக் கொண்டிருக்கிறார்களா அல்லது துண்டுக் காகிதமேனும் வைத்திருக்கிறார்களா என்று. அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தும் விட்டார்கள். பின்பு அறிவுரை சொல்லி விட்டுப்போனார்கள். இது போன்ற ஈரமான மனிதர்கள் இருப்பதால்தான் எத்தனையோ  மாணவர்கள் (மக்குகள்) 10 வதாவது தேற முடிந்தது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று என்கவுன்டர் ஆதரவாளர்கள் போல் யாராவது வாதாட முற்பட்டால் என்னிடம் அதற்கு விடையில்லை. காசு கொடுத்தால் கல்வி, 8 வகையான பள்ளிக்கல்விகள், ஆங்கில, தமிழ்வழி, மனப்பாடக் கல்வி, தேவையற்ற பாடச்சுமை, மன அழுத்தம், சமூக அங்கீகாரம், வேலையின்மை என கல்வித்துறையில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றன. அதை விட்டு விட்டு இதை ஒரு பெரிய பிரச்சனையாக்குவது பார்வைக் குறைபாடு மட்டுமே.

இறுதியாக சுயவிமர்சனம். அந்தத் தேர்வுகளின் போதுதான் வேண்டா வெறுப்பாக சாமி கும்பிட்டேன். நீ இருந்தா என்னைக் காப்பாத்து புள்ளையாரப்பா என்று. கேள்வித்தாள் எளிமையாக வரவேண்டுமென வேண்டுதலில்லை. மாறாக தேர்வறைக்கு வரும் கண்காணிப்பாளர் கண்டிப்பானவராக இருக்கக் கூடாதென்றுதான் கடவுளை வேண்டினோம். இப்படியெல்லாம் காப்பியடித்து  வந்த நான் கல்லூரியில் நன்கு அனுபவித்தேன். இரு பட்டங்களை வாங்கும் முன்பு ஒரு வருடம் வீணாக்கி மொத்தம் 11  அரியர்கள். வேலை கிடைக்காமல் தெருத்தெருவாக அலைந்தும் பெரிதாக ஒன்றும் நடக்க வில்லை. 

இது நியூட்டனின் மூன்றாம் விதியாக இருக்கலாம். என்னுடைய புகைப்படத்தை நன்றியுணர்வுடன் வாங்கிக்கொண்ட என்னுடைய நண்பன் 12 வதுடன் படிப்பை நிறுத்திக் கொண்டான். இப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுக் கவுன்சிலர் ஆகிவிட்டான் என்று கேள்விப்பட்டேன்.  நான் வாங்கும் சம்பளத்தைக் கேட்டு அவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறான்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இந்தியான்னா இந்தியாதான் !!

இதை எதற்கு எழுதுகிறேனென்றால் நேற்று முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. அந்தக் கொடுமையை எதிர்க்க வேண்டும். எந்தக் கேவலமான சிறிய மொன்னைக் காரணம் கிடைத்தாலும் கூட அதை வைத்து கிரிக்கெட்டை விமர்சிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை வைத்திருக்கிறேன். அதற்காகத்தான் இதை எழுதுகிறேன். தற்போது முகநூலில் ஒரு புகைப்படமானது பகிரப்பட்டு வருகிறது. 


இதுதான் அது. ஒரு வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா என்பது அவரது பெயர். அவர் இந்தியாவிற்காக உலக அளவிலான வில்வித்தைப்  போட்டிகளில் சில பட்டங்களையும் வென்றவர். 

நிஷா ராணி தத்தா
அவர் வென்ற பட்டங்கள்

*  2006 - இல் ஓவரால் சிக்கிம் சாம்பியன்
*  தெற்காசிய சாம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கம்
* 2006 பாங்காக்கில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
*  2007 - இல் தைவானில் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதும் பெற்றார்

இவரையெல்லாம் நாம் கொண்டாடவோ அல்லது நினைவு கொள்ளவோ முடியுமா ? இல்லை நமது அரசுதான் இவர்களுக்கு உதவ முடியுமா ? இவருக்கேன் இந்த வேண்டாத வேலை ? போய் கல்யாணங்கட்டிக் கொண்டு புள்ளையைப் பெத்து உப்புமாவைக் கிண்டிவிட்டு காலத்தை ஓட்டுவதை விட்டு இந்தியாவுக்காக விளையாடுகிறாராம். இவருக்கெல்லாம் இது தேவையா ?

தற்போது வறுமையின் காரணமாக தனது பொக்கிஷமாய்ப் பாதுகாத்த உலகத்தரம் வாய்ந்த அம்பையும் வில்லையும் விற்று விட்டாராம். 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அதை எப்படி அவரால் வாங்க முடிந்தது. விளையாட்டுத் துறை கொடுத்ததா இல்லை இல்லை, அவரது திறமையைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அவரது பயிற்சியாளர் கொடுத்தது. 4 இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள அதை வெறும் 50000 க்கு விற்றிருக்கிறார். அவர் கொரியர். நல்லவேளை இந்தியாவில் பிறக்கவில்லை அவர். கூடவே அவரது வில்வித்தையில் செய்ய விரும்பிய சாதனைகளையும். ஏன் தெரியுமா களிமண்ணால் கட்டப்பட்ட அவரது வீடு இடிந்து விட்டதாம். அதை சரி செய்ய அவருக்குக் காசு இல்லையாம். எடுபட்ட ரவீந்திர ஜடேஜா என்னும் வீராதி வீரர் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திருநாட்டில் நிஷாவுக்கு ஒரு வீடும், வேலையும், ஊக்கத் தொகையும், பயிற்சியும் கொடுப்பது நம் அரசாங்கத்தால் இயலாது அல்லவா ? அதற்கு நாமெப்படி கிரிக்கெட்டையும், அரசையும் குறை சொல்வது ?

அவரது தங்கை திருமணம் செய்து கொண்ட போதும் சாதனை செய்ய வேண்டுமென்ற வேட்கையினால் மட்டுமே இன்னும் திருமணம் செய்யாமல் (21 வயது) அரசை நம்பிக் கொண்டிருக்கிறார். இவரது செயல் துரதிருஷ்டவசமானது என, விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார். இல்லை இந்தியாவில் இதுதான் நியாயமானது. 





அடுத்ததாக கபடியில் உலக சாம்பியன் மகளிர், ஆடவர் என இரு பிரிவிலும் இந்தியாதான் சாம்பியன். ஆனால் அவர்களுக்கு நடந்ததைப் பார்ப்போமா ? 12 நாடுகள் விளையாடிய உலக மகா சோம்பேறி மொக்கை விளையாட்டிற்கு சாம்பியன் பட்டம் வென்ற சோதாவிற்கு எத்தனை ஆர்ப்பாட்டங்கள் !!(கபடியும் நிறைய நாடுகள் விளையாடவில்லைதான்). உலக சாம்பியன் பட்டம் வென்ற கையோடு அப்பெண்கள், அவர்கள் தங்கள் கோப்பைகளையும், பதக்கங்களையும், விளையாட்டுச் சான்றிதழ்களையும் ஏந்திக் கொண்டு ரிக்ஷாவிற்காகக் காத்திருந்தார்கள். சிலர் நடந்து சென்றனர். அவர்களுக்கு மகிழுந்து பரிசாகத் தரவேண்டுமென்பதல்ல, போட்டியில் வாகை சூடியதற்காகவாவது ஒரு நாளுக்கு அவர்களுக்கு அந்த வசதியைச் செய்து தந்திருக்கக் கூடாதா ? 

உலக சாம்பியனான இந்தியப் பெண்கள் கபடி அணி
அவர்கள் தங்கியிருந்த விடுதியின் காசைக்கூட போட்டி நிர்வாகிகள் செலுத்தவில்லை. அவர்கள் விடுதியின் பணியாளர்களால் ரூ 22,000 பணம் செலுத்தாததற்காகத் 2 மணி நேரங்களாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒரு சிறிய தீ விபத்தின் காரணமாக அவர்களது சீருடைகள் எரிந்து விட்டன. இது அரை இறுதிப் போட்டிக்கு முன்பாகவே நிகழ்ந்து விட்டது. போட்டி நடந்தது இந்தியாவின் பஞ்சாப்தான் என்றாலும் ஒரு வாரமாக அவர்கள் ஒரே சீருடையை வைத்து சமாளிக்க வேண்டியிருந்தது. இதுதான் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை செய்தவர்கள் நடத்தப்படும் விதம்.

இதே கிரிக்கெட் என்றால் இந்த மூஞ்சிகளைத்தான் நாம் ஆணுறை விளம்பரத்தைத் தவிர அனைத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. சச்சின், டோனி சகாப்தம் முடிந்து இனி கோலி கோடி கோடியாக அள்ளப் போகிறார். 10 வருடங்கள் முன்பு மேற்கிந்தியத் தீவுகள், தற்போது ஆஸ்திரேலியா என பெரிய அணிகளெல்லாம் போண்டியான நிலையில் இனி இந்தியாதான் வெற்றிகளைக் குவிக்கப் போகிறது. இதில் பரவசமடையும் இந்திய தேசபக்தர்கள் எப்படி ஐபிஎல்லையும் அதே பரவச மாநில உணர்வுடன் ரசிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. எப்படியோ தேசபக்தி ஒழிந்தால் சரி.

இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை நடத்தி வருமானத்தை அள்ள முடியாமல் அதை விட பல மடங்கு அள்ளும் ஐபிஎல் போட்டியை நடத்தி வெற்றியும் பெற்று விட்ட போட்டியை நடத்தும் முதலாளிகள், வெளிநாடுகள் போலவே இன்னும் cheerleaders - களின் பாவாடையின் உயரத்தைக் இன்னும் மேலே குறைக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் குறைத்து விட்டால் அவர்களது போர்னோகிராபிக் கலாச்சாரத்தை இந்தியாவில் நிறுவிய பெருமையும் சேரும். அது சரி இப்போது மட்டும் என்ன வாழுதாம் ?

மாணவர்களின் தேர்வை முன்னிட்டும், தமிழகத்தின் மின்பற்றாக்குறையை முன்னிட்டும் இதை தடை செய்ய வேண்டுமென்கிறார்கள். பிராந்திய உணர்வை வளர்த்து தேசத்திலேயே பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று ராம கோபாலன் மாதிரி யாராவது தேசபக்தரகள் குரல் கொடுத்தால் தேவலை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment