வடகொரியர்களின் கண்ணீர் !!

வடகொரியா என்ற நாட்டைப் பற்றி எனக்கு பெரிதாக ஒன்றுமே தெரியாது. 3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை, ஏழை நாடு, ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலின் காரணமாக அணு ஆயுதத்தை உருவாக்கிக் கொண்டது. பத்து இலட்சம் துருப்புக்களைக் கொண்ட வலுவான ராணுவம் என்பதைத் தவிர்த்து. 



ஒரு தலைவருக்காக இத்தனை பேர் தரையில் விழுந்தும், கதறியழுததும் இது வரையில் நான் கண்டதில்லை. இது போலியாகத் தயாரிக்கப்பட்ட காட்சிகள் என்றும் சிலர் கூறுகிறார்கள் மக்கள் தரையில் விழுந்து அழுவது மன்னர்கால அடிமைத்தனத்தை நினைவூட்டும் கலாச்சாரம். அவர்களை மிரட்ட எடுத்திருக்கக் கூடும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. வடகொரிய அதிபர் கிம் ஜோ இல் இறந்த செய்தியைக் கேட்ட ஜான் மெக்கெய்ன் இவ்வாறு கூறினார், "கிம் ஜோ இல்லாத உலகம் இனிமேல் நன்றாக இருக்கும். அவர் நரகத்தில் ஒசாமா, கடாபி, ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்திருப்பார்" என்றார். இதன் மூலமே நான் அவர் ஓரளவுக்காவது தமது நாட்டின் மீது அக்கறையுள்ளவராகவே இருந்திருப்பாரென்று நம்பத் தொடங்கினேன். 



அவர் அமெரிக்காவின் எதிர் என்பதால்தான் சர்வாதிகாரி உலகமே வெறுக்கும் தலைவர், அணுஆயுதத்தைக் கொண்டு உலகையே மிரட்டினார் என்றெல்லாம் மேற்கத்தைய ஊடகங்களால் தூற்றப்பட்டார். இராணுவ ஆட்சி, வெளியுலகத் தொடர்பு துண்டிப்பு, மனித உரிமை மீறல், வறுமை, அணு ஆயுத அபாயம் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருன்தனர். இருப்பினும் இத்தனை மக்கள் கதறியழுவதும் ஏங்குவதையும் பார்த்தால் இது வரை இவர் குறித்தும் வடகொரியா குறித்தும் அறிந்து கொள்ளாமல் இருந்ததற்கு வெட்கப்பட்டேன்.







மேலும் அவரது இறுதி ஊர்வலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விதம் இன்னும் நேர்த்தி என்றாலும் அதை வர்ணிப்பது இவ்விடம் சரிப்படாது. இராணுவத்தினரும் கூட அழுகிறார்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம்தான். சமீபத்தில் பார்த்த நெகிழ்ச்சியான துயரமான காட்சி இதுதான். ஃபிடல் காஸ்ட்ரோ, ஹுகோ சாவேஸ் ஆகியோரும் இறப்பை சந்திக்கப் போகிறார்கள் என்பது எனக்கு இன்னும் துக்கத்தைத் தருகிறது. 

இறுதியாக வட கோரிய ஊடகங்கள் போலியாகத் தயாரித்த காட்சிகள் என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் அது குறித்த ஒரு புகைப்படம் 
மேலிருக்கும் புகைப்படத்தில் இடது ஓரமுள்ள 5 பேரையும் இரண்டாவது புகைப்படத்தில் காணவில்லை. கார் நகர்ந்துள்ள தொலைவைக் கொண்டு வடகொரிய செய்திகள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். 



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

முல்லை பெரியாறு பிரச்சனையில் என்னதான் செய்யப்போகிறது இந்திய அரசு ?

தற்போது  முல்லை  பெரியாறு  பிரச்சனை  எதில்  போய்  முடியுமென்றே  தெரியவில்லை.  தற்போது  எனக்கும்  ஒருவேளை  அணை  வலுவின்றி  இருக்கிறதோ  என்ற  ஐயம்  ஏற்பட்டுவிட்டது.  அந்தளவுக்கு  இருக்கிறது  கேரளா  அரசின்  பரப்புரைகள்.  அங்கே  அணையை  உடைத்தே  ஆகவேண்டுமென்ற  கருத்து  அனைவருக்கும்  போய்  சேர்ந்திருக்கிறது.  இல்லையென்றால்  இவ்வளவு  ஆதரவு  இருக்குமா  ?  நான்கு  மாவட்டங்கள்  மூழ்கி  விடுமேன்றால்  யார்தான்  அஞ்ச  மாட்டார்கள்  ?
 
தமிழ்  நாட்டவர்கள்  சிலர்  என்ன  சொல்கிறார்கள்  என்றால்  ஒருவேளை  முல்லைப்  பெரியாறு  அணை  உடைந்து  போனாலும்  இடுக்கி  அணை  அதை  தாங்கிக்  கொள்ளும்  என்று.  ஆனால்  கேரளத்தவர்கள்  அஞ்சுவது  முல்லைப்  பெரியாறு  அணை  உடைந்து  விடுமென்று  மட்டுமல்ல  மாறாக  தொடர்ச்சியாக  உள்ள  மற்ற  அணைகளும்  உடைந்து  இறுதியாக  இடுக்கி  அணையும்  உடைவதால்  ஏற்படும்  அழிவைக்  குறித்தே  அஞ்சுகின்றனர்.  

இருபக்கத்து  அரசியல்வாதிகளும்  இந்தப்  பிரச்சனையை  சூடாக  வைத்து  ஆதாயம்  தேடுகிறார்கள்.  குறிப்பாக  கேரள  அரசியல்  கட்சிகள்  வெளியே  அன்பொழுகப்  பேசிவிட்டு  அங்கே  இனவெறியைத்  தூண்டிவிடும்  வேலையைச்  செய்து  கொண்டிருக்கிறார்கள்.  படிப்படியாகக்  காய்  நகர்த்தியே  அணையத்  தன்  கட்டுப்பாட்டில்  கொண்டுவருகின்ற  வேலையைத்தான்  கேரளா  கடந்த  30  வருடங்களாகச்  செய்து  வருகிறது. 
 
முல்லைப்  பெரியாறு  அணையை  தம்  வாழ்வாதாரமாகக்  கொண்டிருப்பவர்கள்  காவல்  துறையின்  லத்திக்  கம்புகளுக்கு  எதிராகப்  போராடி  வருகிறார்கள்.  மற்றவர்களோ  தமது  சொந்த  விருப்பு  வெறுப்பின்  காரணமாகவும்,  ஒரு  சில  இனவெறியர்களின்  செயலுக்காகவும்  ஏதுமறியாத  மலையாள  இனத்தவரையே  வசைபாடி  வருகின்றனர்.  அதே  போல்தான்  அங்குள்ளவர்களும்  செய்கின்றனர்.  இணைய  உலகில்  அதிகமாக  இது  நடக்கிறது.  தமிழர்கள்  மிக  மோசமான  இனவாதிகள்  என்பதையே  இணையதளமெங்கும்  விரவிக்  கிடக்கும்  வெறுப்புணர்வு  காட்டுகிறது.  இது  இரு  மாநிலங்களிலும்  இனரீதியான  தாக்குதல்களுக்கு  வழிவகுத்துள்ளது.  இது  போன்று  செய்பவர்கள்  உண்மையில்  விவசாயம்  பாதிக்கப்படுமென்ற  ரீதியில்தான்  கோபப்படுகிறார்களா  என்றால்  இல்லை.  அதே  போல்  மலையாள  இனவெறியர்களும்  இந்தப்  பிரச்சனைகளுக்கிடையே  தமது  நோக்கங்களை  நிறைவேற்றிக்  கொள்ள  எத்தனிக்கின்றனர்.  இந்திய  அளவில்  தமக்கான  ஆதரவை  திரட்டியுள்ளனர்.  அணை  உடைக்கப்  பட  வேண்டியதே  என்ற  கருத்தை  நிலை  நாட்டியுள்ளனர்.  

முத்தாய்ப்பாக  சி  பி  ரோய்  என்ற  முல்லை  பெரியாறு  அணையின்  பாதுகாப்புக்  குறித்துப்  போராடி  வந்த  குழுவின்  தலைவரையே  விலக்கியுள்ளனர்.  காரணம்  அவர்  சொன்ன  எளிய  மாற்று  வழியானது  இரு  மாநிலத்தவர்க்கும்  உகந்ததாக  இருந்த  போதிலும்  அணையை  உடைக்க  வேண்டுமென்ற  கருத்தில்  உடன்பாடில்லாததால்தான்.  இது  குறித்து  விரிவாக  அறிந்துகொள்ள  இங்கே  செல்லவும்.


இந்தத்  திட்டத்தை  செயல்படுத்துவதற்கு  அங்குள்ள  சில  நல்ல  உள்ளங்களுக்கு  பிடிக்காததைத்  தொடர்ந்து  அவர்  விலக்கப்பட்டுள்ளார்.   அவர்களும்  மக்களிடையே  அச்சத்தைத்  தூண்ட  தமிழ்நாட்டில்  பேசப்படும்  கருத்துக்களையே  தெரிவிக்கிறார்கள்.  மத்திய  அரசு  தமிழகத்திற்கு  ஆதரவாக  இருக்கிறதென்று.  இந்திய  அரசு  உண்மையில்  எந்த  மாநிலத்துக்குத்தான்  ஆதரவாக  இருந்திருக்கிறது.  இது  போன்ற  விவகாரங்களைத்  தீராத  பிரச்சனையாக்கி  வைத்திருக்கிறது.  அது  எப்போதும்  இவைகளைத்  தீர்த்து  அமைதிகாண  வழிதேடியதேயில்லை. 
 
அங்கு  அவர்களுக்கு  இந்திய  அளவில்  அறிவாளர்கள்  இதழ்கள்,  மற்ற  ஊடகங்களின்  ஆதரவு  இருக்கிறது.  இந்திய  அரசின்  ஆதரவு  உட்பட.  தமிழக  அளவில்  பார்த்தால்  இது  அனைத்துத்  தரப்பினரையும்  சென்று  சேரவில்லை.  கூடங்குளம்  அணு  உலை  அதற்கும்  குறைவு.  தற்போது  நடக்கும்  அத்தனை  பிரச்சனைக்கும்  காரணமாக  யோக்கிய  சிகாமணி  போல்  வேடிக்கை  பார்க்கும்  நடுவண்  அரசை  மட்டுமே  குற்றம்  சொல்ல  முடியும்.  கூடங்குளம்  எதிர்ப்பு  உச்சத்தில்  இருந்த  நிலையில்  இதைக்  கிளறி  விட்டு  திசை  திருப்பி  உச்ச  நீதி  மன்றத்தின்  தீர்ப்பையே  மதிக்காத  கேரளா  அரசை  ஒன்றுமே  செய்யாமல்  சும்மாவாச்சும்    கூட  அதட்டாமல்  விட்டிருக்கிறதென்றால்  அதற்கென்ன  பொருள்  ?  ஆனால்  ஓரிரு  வருடங்களுக்கு  முன்பு  சேதுக்  கால்வாய்  பிரச்சனையோ  அல்லாதோ  வேறெதுவோ  சரியாக  நினைவில்லை  அதற்கு  தமிழக  அரசு  அடையாள  வேலை  நிறுத்தம்  செய்தது.  அதற்கு  உச்ச  நீதி  மன்றம்  விடுமுறை  நாளிலேயே  நீதி  மன்றத்தைத்  திறந்து  வைத்து  தமிழக  அரசுக்கு  எதிராக  தீர்ப்பளித்தது.  

ஆனால்  காவேரி  பிரச்சனையில்  கர்நாடகத்தையும்  முல்லை  பெரியாறு  பிரச்சனையில்  கேரளவையும்  கண்டிக்கவேயில்லையே  ஏன்  ?  எதற்கெடுத்தாலும்  இந்திய  இறையாண்மையைப்  பற்றி  வகுப்பெடுக்கும்  அமைச்சர்கள்  அதை  தமிழ்  நாட்டுக்கு  மட்டுமே  வைத்திருக்கிறார்கள்  போலும்.  இதே  அணு  உலை  மேற்கு  வங்கம்  கேரளம்  ஆகிய  மாநிலங்களால்  நிராகரிக்கப்பட்டு  தமிழகத்தின்  தலையில்  கட்டப்பட்டது.  இப்போது  மட்டுமே  போராட்டம்  நடப்பதாக  காட்டிக்  கொண்டாலும்  25  வருடங்களாக  நடந்து  வருகிறது.  இதன்  மூலம்  நாட்டின்  வளர்ச்சிக்குத்  தடையாக  இருப்பதாகவும்  ஒரு  கருத்தை  உருவாக்குகிறார்கள்.  இதற்காக  சில  ஆயிரம்  கோடிகள்  செலவு  செய்ததாகவும்  அத்தனையும்  விரயமாகிவிடுமென்றும்  கூறுகிறார்கள். 
அணு  உலை  நிறுவத்  தேவையான  ஆய்வுகள்,  அதன்  முடிவுகள்  எதுவும்  உவப்பானதாகவும்  இல்லை,  அனைத்து  மக்களின்  எதிர்ப்புக்கு  ஆளாகி  நிற்கிறது.  அதை  விரைவில்  செயல்படுத்தவுள்ளதாகவும்  பிரதமர்  அறிவித்து  விட்டார்.  அதைத்  திறக்கும்வரையில்  முல்லைப்  பெரியாறு  விவகாரத்தை  ஆறப்போடாமல்  வைத்திருப்பதுதான்  திட்டம்  போலிருக்கிறது. 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அப்பாடக்கர்கள் தொல்லை தாங்க முடியல

இந்த அப்பாடக்கர் அப்படிங்கற சொல்லைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிய சந்தானம் அத யாருக்குச் சொன்னாருனு படம் பாத்த எல்லார்க்குமே தெரியும். படத்துல நயனோட அப்பாவா வர்றவர் வெட்டிப்பயல் ஆர்யாவ அடிக்கடி கேப்பாரு "தம்பி நீங்க அப்படி என்னதான் பண்றீங்க"ன்னு. அவரு கேட்டதுல ஒரு நியாயமிருக்கு, ஏன்னா தன்னோட மருமகனோட தம்பி அதில்லாம தன்னோட ரெண்டாவது பொண்ணுக்கு நூலு விடறதுனால பொண்ணோட அப்பாவா அந்த அக்கறையும் பயமும் இருக்கணும். ஆனா இந்த அப்பாடக்கருங்க இருக்காங்களே அதாங்க நம்மளோட மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, தாத்தா, பாட்டி தூரத்து சொந்தம், பக்கத்து சொந்தம், தெரிஞ்சவங்க,  வேண்டியவங்க, அதில்லாம இவங்களோட சொந்தக்காரங்க, இவங்களோட கூட்டாளிக இப்படி எல்லாருமே ஒரு மாதிரியாத்தான் அலையராங்க போல.

(எச்சரிக்கை இது முற்றிலும் என்னுடைய சொந்த புலம்பல் மட்டுமே ரொம்ப அறுவையா இருக்கும். பெரிய சுவாரசியமாகவோ நகைச்சுவையோ இருக்காது. இவைகளை எதிர்ப்பார்ப்பவர்கள் இந்த இடுகையைப் படித்து ஏமாந்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்)

இப்ப நீங்க ஒரு ஆணா இருந்தீங்கன்னா நான் சொல்றத நீங்களும் கொஞ்சமாவது அனுபவச்சிருப்பீங்க. முக்கியமா உங்களுக்கு 20 லிருந்து 30 வயதில இருக்கற ஆளா இருந்தா இன்னும் நல்லா தெரிஞ்சிருப்பீங்க. நீங்க கல்லூரியில் படிப்ப முடிக்கற நாட்களிலிருந்து ஒரு விதமான அழுத்தத்தை இவங்க உங்களுக்குக் கொடுத்துட்டே இருப்பாங்க.

உங்க வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்களோ இல்ல நீங்க வழியில எங்கயாவது மாட்டிகிட்டீங்கனாக்க இப்படித்தான் கேட்டு சாகடிப்பாங்க முக்கியமா உங்க கூட யாராவது இருக்கும் போதுதான் மாட்டுவீங்க. இந்த மாதிரி கேட்கறவங்க பெரும்பான்மையா படிக்காதவங்களா இருக்காங்க. படிச்சவங்களா இருந்தாலும்  நிலவரம் தெரியாதவங்களா இருக்கிறாங்க. இவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் டாக்டரு, வக்கீலு, இஞ்சினீயரு, வாத்தியாரு, கவுருமெண்டு இவ்வளவுதான். பெரும்பான்மையானவங்க படிக்கிறது இது எதுவுமே இல்ல. பொறியியல் குறிப்பிட்ட சிலர்,  மருத்துவம் மிகச்சிலர், இது போக அதிகம் பேர் படிக்கிறது கணிணி தொடர்பான துறைகள், மத்தவங்க பிகாம், பிபிஏ, பிபிஎம், இன்னும் பாலிடெக்னிக், டிப்ளமோ, சில அறிவியல் தொடர்பான படிப்புகள்தான். இதுல எங்கயாவது வேலைக்கு உத்தரவாதம் தர்ற படிப்பு எதுன்னு கேட்டா எதுவுமே இல்லன்னுதான் சொல்ல முடியும். ஐஐடி, இன்னும் சில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், சில பெரிய கல்லூரிகள் இவைகளில் படிச்சா மட்டும்தான் நேர்காணல்ல கலந்துக்கற வாய்ப்பே கிடைக்கும். இல்லன்ன பொட்டியக் கட்டிட்டு சென்னைக்கோ பெங்களூருவுக்கோ போயி  தெருத்தெருவா அலஞ்சாதான் ஏதாவது மாட்ட வாய்ப்பு இருக்கு. நல்லா படிங்க மாட்ட வாய்ப்பு இருக்கு உறுதியா கிடைக்கும்னு சொல்ல முடியாது. இதுதான் நிலவரம். இதெல்லாம் படிச்சு முடிச்சப்பறம்தான் நமக்கே தெரியும். இந்த லட்சணத்துல சோத்துக்கு வந்தமா தின்னுட்டுப் போனமான்னு இல்லாம

என்ன படிக்கற ?,

எதப்பத்தி படிக்கற ?

என்ன மாதிரி வேல கெடைக்கும் ?

கவுருமென்ட்டு வேல கெடைக்குமா ?

இப்படியெல்லா கேட்டுட்டு அப்படியே பேச்சுவாக்கில "இந்தக் காலத்துலெல்லாம் எங்கங்க வேல கெடக்குது. எல்லாரும் டிகிரி படிச்சிட்டு வேலைக்குப் போகனும்னா நடக்கறதா ? கம்முனு படிக்க வைக்கிற செலவுக்கு தொழில பாத்துகிட்டாலாச்சு கைக்காசு மிச்சமாகும்.

இந்த மாதிரி கொளுத்திப்போட்டுட்டு போக வேண்டியது. கெடச்ச இடத்திலெல்லாம் நோண்டி நொங்கெடுக்க வேண்டியது. இங்க எங்களுக்கு டங்குவாரு அந்து போகுது.

போதாக்குறைக்கு நான் படிச்சது உயிர்நுட்பவியல் (Biotechnology) இத படிச்சா என்ன வேல கிடைக்கும்ன்னு யாருக்குமே தெரியாது. இவங்களுக்கு நான் பதில் சொல்ல பட்ட பாடு இருக்கே யப்பப்பா !! அத ஏங் கேக்கறீங்க !

அதாவது பரவால்ல வேல கிடைக்காம சுத்திட்டிருந்தப்பத்தான் உச்ச கட்ட மனஅழுத்தமே வந்திரும். ஒவ்வொரு முறையும் நேர்காணலுக்குப் போயிட்டு வெளியே வரும்போது ஒரு மாதிரியா இருக்கும். வெறுமையா இருக்கும். ரெஸ்யூமை தூக்கிட்டு சாலையில போறப்ப வர்றப்ப எல்லோரும் நம்மளையே பாக்க்ற மாதிரி கூச்சமா இருக்கும். நேர்காணல்ல நாலு சுவத்துக்குள்ள நாப்பது பேர்க்கு நடுவுல மானம் போறது தனிக்கதை.

அதுவும் நான் படிச்சு முடிச்சப்ப சரியா உலக பொருளாதார தேக்கம் வந்தது. 2008 இல். அப்ப இருக்கறவங்களுக்கே வேலை எப்ப வேணா போகுன்ற நிலைமைதான் இருந்துச்சு. என்னதான் நாம முக்குனாலும் ஒரு சிலருக்குத்தான் ஓரளவுக்கு மனநிறைவான வேலையே கிடைக்குது. ஒருவேளை வேலை நமக்குப் பிடிக்கலன்னாலும் ஊதியமாவது ஓரளவுக்கு வந்தால் கூட போதும். ஆனா பாருங்க இது எத்தன பேருக்கு அமையும்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் இருக்கறவங்களுக்கு ஓரளவுக்கு காலூன்றி விட்டார்கள் என சொல்லலாம். பணிச்சுமை மிகவும் அதிகம்தான். இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே சமாளிக்க முடியாதளவுக்கு இருக்கு சிலர் பரவால்ல என்கிற மாதிரிதான் சொல்கிறார்கள். இருந்தாலும் அவர்கள்தான் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவு முன்னேற்றப்பாதையில் இருக்கிறார்கள் எனலாம்.

ஆனா இந்த பிபிஓ என்கிற சேவைத்துறை இருக்கிறதே அதுதான் நான் சொல்ல வர்றதே. சேவைத்துறையில் மிக எளிமையா வேலை வாங்கிரலாம், ஆரம்பத்திலேயே 10000 வரையில் அல்லது அதுக்கு மேல வரைக்கும் கிடைக்கும், ஆனா முன்னேற முடியாது தகவல் தொழில்நுட்பத்துறையில் இருப்பது மாதிரி என்பார்கள். ஆனால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிபிஓ பணியில் சேர்வதும் மிகவும் சிரமமானது. ஒரு சிலருக்குத்தான் அதிர்ஷ்டமே இருக்கும். திறமையும் வேண்டும் சில நேரத்தில் அதிர்ஷ்டம் மட்டுமே வேண்டும்.

இதில்லாமல் சிறு சிறு நிறுவனங்களின் பிபிஓக்களில் சேர்ந்தால் தொலைந்தீர்கள். நேந்து விட்ட காளைமாதிர்தான். கொத்தடிமைதான். கொத்தடிமை என்னும் சொல்லுக்கு முழுப்பொருளையும் அனுபவித்து உணரலாம்.  கண்வலிக்க கணிணியைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். நாளும் பணிச்சுமை, உற்பத்தி இலக்கு (target) இருக்கும். இவையெல்லாம் எல்லாப் பணிகளிலும் இருப்பதுதான் எந்த வேலையும் எளிதானதல்ல என்பதும் சரிதான். ஆனால் பிபிஓ வில் இவையெல்லாம் இன்னும் தனித்துவமானது. இருமடங்கு வேலை பாதி ஊதியம் என்ற அளவில்தான் இருக்கும். இதில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே உங்கள் இயல்பே மாறிவிடும். உடல் நலம் மனநலமும் குன்றி விடும். எனக்கே பார்த்தீங்கன்னா முன்பெல்லாம் நிறைய நூல்களை விரும்பிப் படிப்பேன். அப்போ வாங்கக் காசில்லைன்னு வேலைக்குப் போய் சம்பாதிச்சு நிறைய வாங்கி வச்சுப் படிச்சு அறிவாளியாயிரலாம்னு கணக்குப் போட்டிருந்தேன். குடுக்கிற சம்பளம் வாயக்கும் வயத்துக்குமே சரியாப்போச்சு அது வேற. ஆன எதையும் புதுசா படிக்கவே தோன்றுவதில்லை, நூல்களும் வாங்குவதில்லை. நூலகத்திற்கும் போவதில்லை. பள்ளி, கல்லூரியில் படிக்கிறப்பவெல்லாம் ஓரளவு கவிதைகள் எழுத வரும் ஏன்னா நானொரு தமிழ் ஆர்வக்கோளாறு. ஆனால் இப்ப சுத்தம்.

நான் நான்கு வருடம் முன்பே வலைப்பூவை அறிந்திருந்தேன். மூன்று வருடத்திற்கு முன்பே வலைப்பூ எழுத தொடங்கி விட்டேன். இரண்டு முறை வலைப்பூவை எழுதும் எண்ணத்தைக் கைவிட்டு அதை அழித்தும் விட்டேன். இது மூன்றாவது வலைப்பூ ஏதோ ஒரு மனநிலையில் இதை மட்டும் அழிக்காமல் வைத்திருக்கிறேன். மாதம் ஒரு இடுகை கூட எழுத இயலவில்லை. இதுதான் எனது மாற்றம். சேவைத்துறைக்கு நன்றி.

இப்படி பைத்தியம் புடிக்கற அளவுக்கு வேலை பார்த்தாலும் உங்களால ரூ 10000 கூட வாங்க முடியாது. பெரும்பான்மையான சிறு பிபிஓ நிறுவங்களின் சம்பளம் பத்தாயிரம் அல்லது அதுக்கு மேல இருக்காது. எனக்குத் தெரிந்து 5000 - 8000  வரை சராசரியாக. இதில் இன்னொரு செய்தி என்னன்னா இதில் வேலை நேரம் இரவாகத்தான் இருக்கும். பகல் நேரம் பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டியிருக்கும். ஊக்கத்தொகை ஒரு ஆயிரமோ இரண்டாயிரமோ அதிகமாகக் கிடைக்கும். அவ்வளவுதான் நான் 4000 ரூபாய் சம்பளத்தில் ஒரு 6 மாதங்கள் வரையில் இரவு நேர பணியில் இருந்திருக்கிறேன். ஊதியம்தான் குறைவே ஒழிய வேலையெல்லாம் சும்மா ஙொக்காமக்கான்னு இருக்கும். எப்படா காலைல 5 மணியாகும்னு இருக்கும். இந்த மாதிரி 5000க்கும்  6000க்கும் வேலை பார்ப்பவர்கள் அதுவும் இரவு நேரம் 50 கிலோ மீட்டர்கள் வரை பயணித்து வந்து பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய வெற வழியில்ல. போதாக்குறைக்கு எப்ப வேண்டுமானாலும் வேலையிலிருந்து துரத்தியடிக்கப்படும் அபாயம். சனிக்கிழமை விடுமுறையும் கிடையாது.

மீண்டும் அப்பாடக்கர்களுக்கு வருவோம். இப்படியெல்லாம் செத்துச் சுண்ணாம்பாயி வேல பார்த்தா இவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றால்

எதுக்கு அந்த வேலைக்குப் போற ?
(வேற வேல கிடக்கல இது கூடவா தெரியாது)

 உடனே எடுத்து விடவேண்டியது கம்பியூட்டரு வேலன்னா 50000, 60000 கிடைக்கும்னு சொல்றாங்க ?

இப்படியெல்லாம் கேட்டா என்ன செய்யறது.

இந்த முண்டங்கள்தான் குழந்தைகளைப் படிக்க வைக்கும்போதே ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கச் சொல்லி அச்சுறுத்தும் வன்முறையாளர்கள். அதிகம் சம்பாதிக்கத் துப்பில்லாதவனை மதிப்பின்றி பார்க்கிறார்கள். எல்லோராலும் முதலிடத்திற்கு வரமுடியாது என்ற எளிய உண்மையைக் கூட உணராதவர்கள். எத்தனை நாள்தான் இவர்களுக்கு பதில் சொல்லப் பயந்தே ஓடி ஒளிவது. யாராவது எதார்த்தமாகக் கேட்டால் கூட குத்துகிறது.

இது போதாதென்று சில நண்பர்களும் அப்பாடக்கர் அவதாரமெடுக்கிறார்கள். ஒரு குழுவிலிருக்கும் ஒரு நண்பனுக்கு மற்றவர்களை விட மிக் உயர்ந்த இடத்தில் பணி கிடைத்துவிட்டால் நமக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையும் அவர்களிடம் ஒரு அந்நியத்தன்மையும் வந்து விடுகிறது.

என்னடா மச்சி ஃபேஸ்புக்ல அப்டேட்டெ பண்றதில்லையா ?

வேற வேலைக்கு ட்ரை பண்ற ஐடியாவே இல்லையா ? என்றும் கடுப்பேத்துகிறார்கள். ஃபேஸ்புக்கில் அப்டேட்டுமள்விற்கு ஒண்ணுமில்ல என்று தெரிந்தும் கேட்டால் என்ன செய்வது.

இப்போது திருமணச்சந்தையில் விலைபோகாத சரக்குகளாக இருப்பவர்கள் இவர்கள்தான்.(நானும்தான்( எல்லாம் ஒரு சுய பச்சாதாபம்தான்)). 10000 கூட சம்பாதிக்க இயலாதவனை நம்பி யார்தான் பெண் தருவார்கள். என்னுடைய நண்பி ஒருத்தி கூட எனக்காகப் பரிதாபப் பட்டார்.

"அச்சச்சோ உங்களுக்கெல்லாம் யாரு பொண்ணு கொடுப்பா?" என்று.

அது சரிதான யாரு குடுப்பா ?. படிச்சு முடிச்ச ரெண்டு வருடங்களில் ஓரளவுக்காவது சம்பளத்துல வேல உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான் கடைசி வரை சிங்கியடிக்க வேண்டியதுதான். ஒரு சிலருக்கு மட்டும் மிக விரைவிலேயே அது அமைந்து விடும். நம்மள விட ஏழெட்டு வருடம் பின்னால பொறந்த முண்டங்களெல்லாம் வந்து நம்முடனேயே வேலை பார்க்கிறதுகள். என்னை பெருசு என்று வேறு ஓட்டுகிறார்கள். அது சரிதான தொப்பை வருது, முடி நரைக்குது, முடி கொட்டி சொட்டை விழுது வேற எப்படிக் கூப்பிடுவார்கள். என்னத்த சொல்றது ??. திருமண வயசு ஆகிட்டதால இனி பொண்ணு பார்க்கற வைபவம் வந்துச்சுன்னா அப்பதான் இருக்கு கச்சேரியே. இன்னும் எத்தனை வகையான அப்பாடக்கர்களிடம் சிக்கி சின்னபின்னமாவதோ ?

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பாலினப்படுகொலை: பிறக்காமல் போன 160 மில்லியன் பெண்கள்


"இவ்வுலகிலிருந்து100  மில்லியனுக்கும் அதிகமான பெண்களைக் காணவில்லை" என்று  கூறி  1990  இல்  அதிர்ச்சியை   ஏற்படுத்தினார்  நோபல்  பரிசு  பெற்ற  அறிஞரான  அமர்த்தியா  சென்.  பொருளாதார  வளர்ச்சி  பெண்களின்  எண்ணிக்கையைக்  குறைத்திருப்பதாக  எழுதிய  அமர்த்தியா  சென்  இருப்பினும்  பெண்களின்  எண்ணிக்கை  எப்படிக்  குறைந்தது  என்பது  குறித்துத்  தெளிவாக  அவர்  விளக்கவில்லை. அமர்த்தியா சென் இதற்கான காரணிகளாக ஊட்டச்சத்துக் குறைபாடு, வறுமை, கல்வியின்மை எனற வகையிலேயே விளக்கியிருந்தார். மிக முக்கியக் காரணியாக இருந்த ஒன்றைக் குறிப்பிடவில்லை, இதை  மாரா விஸ்டெண்டால்  (Mara Hvistendahl)  என்பவர்,  தன்னுடைய  "Unnatural Selection: Choosing Boys Over Girls, and the Consequences of a World Full of Men"  என்ற  நூலில்  விளக்கியுள்ளார்.  உலகில்  அதிகமான  ஆண்குழந்தைகள்  பிறந்து  இறக்கின்றன.  இயற்கையாகவே  இது  நடக்கிறது.  இயல்பான  பிறப்பு  விகிதம்  என்பது,  100  பெண்குழந்தைகளுக்கு  103  -  106  பெண்குழந்தைகள்  வரையில்  பிறப்பதாக  இருந்தது.  ஆனால்  சமீப  வருடங்களில்  இது  மாறி  அதிகமான  பெண்குழந்தைகளின்  இறப்பு  அதிகமாகியிருக்கிறது.  இதற்குக்  காரணம்  பாலினப்படுகொலை (gendercide).  அதாவது  பெண்குழந்தைகளைக்  கருவிலேயே  கலைத்து  விடுவதாகும்.  எடுத்துக்காட்டாக  சீனாவில்  ஆண்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதமானது  125:  100  என்ற  நிலைக்கு  நெருங்குகிறது.  2005  -  இல்  எடுக்கப்பட்ட  கணக்கீடுகளின்படி  ஆண்பெண்  பிறப்பின்  சமன்பாடு  மோசமான  நிலையில்  இருக்கும்  5  நாடுகள்  சீனா,  தென்கொரியா,  அஸர்பெய்ஜான்,  ஆர்மீனியா  மற்றும்  ஜார்ஜியா.  2010  இல்  எடுக்கப்பட்ட  புள்ளிவிபரங்களின்  படி  இவ்வாறு  பிறக்காமல்  போன  பெண்கள்  இந்தியா,  சீனாவில்  மட்டும்  85  விழுக்காடுகள்  இருக்கலாம்.



கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறிந்து  கொள்ள  தாய்க்கு  அனுமதியில்லையென்ற  போதிலும்  மருத்துவர்கள்  இதில்  குறுக்கு  வழியில்  உதவுகின்றனர்.  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறியும்  ஆய்வும்,  (கருவானது  பெண்ணாக  இருக்கும்  பட்சத்தில்) அதனைத்  தொடர்ந்த  கருக்கலைப்பும்  ஆசியக்  கண்டத்தில்  மட்டும்  160  மில்லியன்  பெண்களை  அழித்துள்ளது.  இந்தத்  தகவல்  2005  இல்  எடுக்கப்பட்ட  புள்ளி  விவரத்தின்  அடிப்படையில்  அமைந்ததாகும்.  அமெரிக்காவிலுள்ள மொத்தப் பெண்களின்  எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகமாகும்.

இதன்  மூலகாரணமாக  விளங்குபவை  பெண்குழந்தையைக்  காட்டிலும்  ஆண்குழந்தை  பெறுவதை  விரும்பும்  கட்டுப்பெட்டித்தனமான  பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க  ஆசிய  சமூக  பண்பாட்டுக்  காரணிகளே.  ஆணாதிக்கப் பாதிப்பு நிறைந்த இந்தியாவில்  வரதட்சிணை  எனும்  மணக்கொடை  பெண்குழந்தை  பெற்றுக்  கொள்வதை  சிரமமாகக்  கருதுகிறது.  இந்து, கிறித்தவம், புத்தம், என அனைத்து சமயங்களிலும் இதுவே நிலை. சீனாவில்  பிறப்பிக்கப்பட்ட  ஒரு  குழந்தைத்  திட்டத்தின்  பின்பு சீனர்கள் பெண்குழந்தைகளைக் கலைத்து விட்டு ஆண்குழந்தையை பெற்றுக் கொள்ளவதில் ஆர்வம் காட்டினர்.

உலக அளவில் ஆண் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 101:100  என்ற அளவில் இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் நிறைந்த ஆசிய நாடுகளிலும் இந்தியா சீனாவிலும் ஏற்பட்டுள்ள இந்நிலை உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாரா  விஸ்டென்டால் சிலிர்க்க  வைக்கும்  காரணங்களை  தனது  நூலில்  கூறுகிறார்.  இவர்  விருது  பெற்ற  அறிவியல்  இதழாளர்.  ஆசியாவில்  9  நாடுகளில்  பயணித்துள்ள  இவர்  இந்நாடுகளில்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதம்  குறைவாக  இருப்பதற்கான  காரணங்களை  ஆராய்ந்து  அதன்  மூலகாரணங்களை  கண்டறிந்து  தனது  நூலில்  எழுதியுள்ளார்.  ஆசியாவில்  பாலினத்  தேர்வு (sex selection)  நடப்பது  நாம்  நினைப்பது  போல்  அவ்வளவு  சாதாரணமாகவோ இயல்பாகவோ  இல்லை  என்று  குறிப்பிடும்  மாரா  இதற்காக  மேற்குலகைக் குற்றம்  சாட்டுகிறார்.  அவர்கள்  ஏன்  அதைச்  செய்தார்கள்  என்ற  காரணத்தையும்  அவரே  விளக்கியும்  விடுகிறார்.
மாரா  விஸ்டென்டால்
மேற்குலகின் உதவி

மேற்குலக அரசுகளும், மனித வள மேம்பாட்டு (philanthropic)  நிறுவனங்களும்  இதற்குப்  பெருமளவில்  உதவின.  1950  களிலேயே  மூன்றாமுலக  நாடுகள்  கருக்கலைப்பை  சட்டப்பூர்வமாக்கியதுடன்  அதற்காதரவாக  அமெரிக்கப்  பணத்தின்  உதவியுடன்  பரப்புரையும்  செய்யத்  துவங்கின.   (ஃபோர்டு  அறக்கட்டளை,  உலக  வங்கி,  ராக்ஃபெல்லர்  அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் இதில் உதவின ) பனிப்போர்க்காரர்களான  குடியரசுக்  கட்சியினரும்  மக்கள்  தொகைப்பெருக்கம் காரணமாக அதிகமான எண்ணிக்கையிலான பசித்த வயிறுகள் கம்யூனிசத்தை நோக்கித் திரும்பும் அபாயம் இருப்பதால், பொதுவுடமைத்  தத்துவம்  வளர  வழிவகுத்துவிடுமென்று  நம்ப,  இடதுசாரி  விஞ்ஞானிகளும்,  இயக்கங்களும்  "பெண்களின்  தேவை (
பெண்களின் உரிமை)"  என்றும்,  "எதிர்கால  மனித  வளத்துக்கு  அல்லது  மனிதன்  உலகில்  நிலைத்திருப்பதற்கும்"  கருக்கலைப்பை  இன்றியமையாததாகக்  கருதினர்.  இப்படியாக மாற்றுக் கொள்கைகைக் காரர்களாக இருந்த பொதுவுடமைவாதிகளும் தனியுடமைவாதிகளும் பெண்களின் "பிறக்கும் உரிமைக்கு" ??!  எதிராக கொள்கை ரீதியாக ஒன்றானார்கள்.  இது  போன்ற  மக்கள்  தொகை  கட்டுப்பாட்டு ஆதரவாளர்களின் மக்கள்  தொகையைக்  கட்டுப்படுத்தும்  ஒரு கோரிக்கையாக முன்வைத்தது  பாலினத்  தேர்வையே.  இதன் மூலம் பெண்கள் குறைவான எண்ணிக்கையில் வைத்திருக்கும் சமூகம் குறைவான மக்கள் தொகையையே  பெறும்  என்று  கணக்கிட்டிருந்தார்கள்.

பனிப்போர்  காலத்தில்  தொடங்கப்பட்ட  மக்கள்  தொகைக்  கட்டுப்பாட்டு  இயக்கங்களின்  மூலமாக,  அதிகமாக  குழந்தைகள்  பிறப்பதும்  அவர்கள்  பசியுடன்  வளர்வதும்  அவர்கள்  கம்யூனிசத்தில்  ஈர்க்கப்பட்டு  விடுவார்கள்  என்று  அஞ்சினார்கள்.  இந்த  அச்சுறுத்தலின்  காரணமாக விளைந்த கொள்கைகளால் இந்தியா,  சீனா,  தென்கொரியா  ஆகிய  ஆசிய  நாடுகளில்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதத்தைக்  குறைத்தது.  இதற்கான  ஆதாரங்களையும்  மாரா  கூறுகிறார்.  பல  நிறுவனங்கள்  மக்கள்  தொகையைக்  குறைப்பதற்கான  ஒருவழியாகவே  கருக்கலைப்பை  ஊக்குவித்தனர்.  மேற்குலகின்  பணத்தைக்கொண்டு  இதற்காக  மிகப்பெரும்  வலைப்பின்னல்  உருவாக்கப்பட்டது.   குடும்பக்கட்டுப்பாட்டு  ஆலோசகர்களும்,  மருத்துவர்களும்  பெண்களை  அமினோ  சிண்டிசிஸ்  ஆய்வினை  மேற்கொள்ளுமாறு  ஊக்கப்படுத்தினார்கள்.


அமினோசென்டிசிஸ் (பனிக்குட துளைப்பு) என்ற ஆய்வானது, கருவறையிலிருந்து பெறப்பட்ட ஒரு திரவத்தை ஆய்ந்து அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தையின் உடல்நலத்தினை உறுதி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதாகும். ஆனால் இந்தியாவிலோ அமினோசென்டிசிஸ் கருவின் பாலியலை உறுதி செய்யும் (Sex Determination) நோக்கத்திற்காகவே அந்நாட்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்தி வந்த  மருத்துவ நிறுவனனங்கள், வெளிப்படையான விளம்பரங்களுடனேயே இதை செய்தன. இதற்கெதிரான சட்டமோ கட்டுப்பாடுகளோ இருந்திருக்கவில்லை. இந்த ஆய்வு நடத்துவதற்கு ஆகும் செலவு ரூ 500 என்ற நோக்கில் இம்மருத்துவ நிறுவனங்களின் விளம்பர வாசகங்கள் இவ்வாறு இருந்தன. "எதிர்காலத்தின் செலவு 50,000-ஐ  விட தற்போதைய செலவு 500 சிறந்தது" (“Better 500 now than 50,000 later”) அதாவது எதிர்காலத்தில் (பெண்ணின்) திருமணத்திற்கு ரூ 50000 செலவு செய்வதைக் காட்டிலும் தற்போது ரூ 500 செலவில் அமினோசென்டிசிஸ் ஆய்வை செய்து, பெண்குழந்தையாக இருப்பின் அதைக் கலைத்து செலவை மிச்சப்படுத்துங்கள் என்றன அவ்விளம்பர வாசகங்கள். இவ்வாறு ஒரு சிசு நோய்க்குறியீட்டுடன் இருந்தால் அதைக் கலைத்து விடுவது நல்லது என்பதைப் போலவே சிசு பெண்ணாக இருப்பதால் கலைத்துவிடலாம் தவறில்லை என்ற கருத்து பரவலாக இருந்தது.

அதனால்  இந்தியாவில்,  பெண்  சிசுக்கொலைகள்  அதாவது  கருக்கலைப்புகள் அரசு  மருத்துவமனைகளில்  வெளிப்படையாகவே  நடைபெற்றது.  மருத்துவர்கள்  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறிய  உதவியதுடன்,  பெண்குழந்தையாக  இருப்பின்  அதைக்  கலைக்கவும்  செய்தார்கள்.  மேலும்  இந்தியாவில்  மிகப்பெரும்  மருத்துவ  நிறுவனமான  அகில  இந்திய  மருத்துவக்  கழகம்  (AIIMS)  இதில்  முன்னணியில்  இருந்தது.  இதன்  மருத்துவர்கள்  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறியும்  சோதனைகளை  அதிகப்படுத்துவதன்  மூலம்  மக்கள்  தொகையைக்  கட்டுப்படுத்த  முடியும்  என்ற  கருத்தைப்  பரப்பினார்கள்.  இதையே  இன்னும்  கொஞ்சம்  தெளிவாகச்  சொன்னால்  மக்கள்  தொகைக்  கட்டுப்பாடு  என்ற  பெயரில்  பெண்சிசுக்களைக்  கலைத்தனர்.  பாலினத்தேர்வு  (sex determintion) பற்றி 1970  களின்  பின்பகுதியில்தான் இந்தியப்  பெண்ணியவாதிகள்    எதிர்ப்புக்குரல்  எழுப்பத்  தொடங்கினர்.  ஆனால்  அதற்கு  முன்னதாகவே  பெருமளவிலான  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டிருந்தன.  இதன்  மூலமாக  பெண்குழந்தைகள்  பிறப்பானது  குறைக்கப்பட்டிருந்தது.  அகில்  இந்திய  மருத்துவக்  கழகத்தில்  மட்டும்  ஏறக்குறைய  100000  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டிருந்தன.  இந்தியர்களின்  வரிப்பணமும்  மேற்குலகின்  பணமும்  இதற்கு  உதவின.

1978 - இல் ஒரு நிகழ்வு, டெல்லியிலுள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையிலுள்ள மகப்பேறு தளத்திற்கு ஒரு மருத்துவ மாணவர் செல்கிறார்.
தன் வாயில் உள்ளங்கை அளவிலான ஒரு சதைத் துண்டைக் கவ்வியவாறு பூனையொன்று, அவரைக்  கடந்து செல்கிறது, ஆரம்பத்தில் பூனையின் வாயிலிருப்பது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை, ஆனால் பின்பு அவர்  அறுவைசிகிச்சைக்கான கருவிகள் வைக்கப் பயன்படும் தட்டில் சிதைக்கப்பட்ட சிசுவும் இரத்தத்துடன் வைக்கப்பட்டிருந்ததைக் காண்கிறார் பின்பு புரிந்து கொண்டு அதிர்ச்சியுடன் அங்கிருந்த செவிலியரிடம் அதை ஏன் முறையாக அடக்கம் செய்யவில்லை என்று கேட்கிறார். அதற்கு அவர் அது பெண்சிசு என்று பதிலளித்தாராம். பெண்சிசுக்கள் கலைக்கப்படுவது மிகவும் இயல்பாகவும் சாதாரண நிகழ்வாகவும் இருந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு

மேலும்  மேற்கு  செய்த  அடுத்த  கொடுமை  வறுமை  சூழ்ந்த  பகுதிகளில்  வாழும்  ஏழைகளுக்கு  பணம்  வழங்கப்பட்டு  குடும்பக்கட்டுப்பாடு  செய்தது.  இந்திரா காந்தியின் அவசர நிலைக் காலத்தில் மட்டும்கட்டாய  குடும்பக்  கட்டுப்பாட்டு  அறுவை  சிகிச்சைகள்  ஒருவருடத்தில்  மட்டும்  அரசாங்கத்தால்  ஏறக்குறைய  6  மில்லியன்  ஏழை  இந்தியர்களுக்கு  நடத்தி  முடித்தது.  இது  நாஜிக்கள்  யூதர்களுக்கு  நிகழ்த்தியதை  விட  15  மடங்கு  அதிகமாகும்.


இக்காலங்களிலெல்லாம்  பெண்கள்  பிறப்பு  விகிதம்  தொடர்ந்து  குறைந்து  கொண்டேயிருந்தது.  1970  களின்  இறுதியிலிருந்து  மருத்துவ  மனைகளும்  (clinic)  கருவின்  பாலினச்  சோதனையை  நடத்துவதை  விளம்பரமாகவே  செய்யத்  தொடங்கின.  பஞ்சாப்பிலிருந்து  இது  டெல்லி  ஹரியானா  போன்ற  மாநிலங்களுக்கும்  பரவியது.  1978  லிருந்து  1983  வரையிலான  காலப்பகுதியில்  மட்டும்  78000  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டன.  கருவை  அறியும்  சோதனைகளின்  மூலமாகவே  பெண்குழந்தைகளின்  விகிதம்  மோசமான  அளவுக்குக்  குறைந்து  போனது.


இவை  மட்டுமல்ல,  1960  களின்  இறுதியிலும்,  1970  களின்  தொடக்கங்களிலும்,  செல்வாக்கும்  மிக்க  அமெரிக்க  நிபுணர்கள்  கல்வியில்  இதைத்  திணிக்க,  அரசாங்கத்தால்  நிகழ்த்தப்படும்  கருத்தரங்களிலும்  கலந்து  கொண்டு இதை  வலியுறுத்தினார்கள்.  1969  இல்  பாலினத்  தேர்வு  என்பதை  உலகிற்கான  முக்கியமான  திட்டமாக  அமெரிக்க  அரசாங்கத்தால்  அறிவிக்கப்பட்டது. இதன்  முக்கியமான  அம்சம்  பிறப்பு  விகிதத்தைக்  கட்டுப்படுத்துவது.

பாலியல்  சமநிலையின்மையினால்  ஏற்படும்  சமூக  சீரழிவுகள்  :

ஆணாதிக்க  உலகில்  இயல்பாகவே  இருக்கும்  குடும்ப  வன்முறை,  சமூக  வன்முறை, குடும்பப் பெருமை சீர்குலைவு போன்றவற்றை எதிர்கொண்ட பெண்களும் தாம் பெண்குழந்தை பெறுவதைவிரும்பவில்லை.  அமெரிக்க  வாழ்  ஆசிய  சமூகத்தைச்  சார்ந்த  பெண்களிடம்  இது  அதிகமாக  இருக்கிறது. ஆசிய நாடுகளில் பெண் சிசுவைக் கலைக்க விரும்பும் பெண்கள் எழைகளல்ல, மாறாக மெத்தப்படித்தவர்களான மேட்டுகுடி வர்க்கத்தினராவர். நவீன பொருட்களை விரைவாகவும் எளிதாகவும் நுகரும் திறனுள்ள வசதியான பெண்களே பெண் சிசுக் கலைப்பை அதிகமாக செய்கிறார்கள். 





இது   போன்ற   பிறப்பு   விகிதக்   குறைபாட்டினால்   பெண்களின்  எண்ணிக்கை  கணிசமாகக்   குறைந்து   விட துணை   கிடைக்காத   ஆண்களின்   எண்ணிக்கை   அதிகரிக்கிறது.   தென்கொரியாவில்   2008   இல்   நடந்த   திருமணங்களில்   11%   ஆண்கள்   வெளிநாட்டிலிருந்தே   மணப்பெண்ணையே   தேர்ந்தெடுத்துள்ளனர்   என்பதே   இதற்கு உதாரணம்.   மேலும்   சமூக   வன்முறையும்   பெண்துணை   கிடைக்காத   ஆண்களால்   அதிகரிக்கிறது.   இன்னும்   கவலைக்குரியதாக   பெண்கள்   மீதான   வன்முறையை   இன்னும்   பல   மடங்குகளாக   அதிகரிக்கிறது.   இந்த ஆண் பெண் விகிதாச்சாரமானது வன்முறையில் பெரும்பங்கு வகிப்பதாக வாதிடுகிறார் மாரா. இதன் ஆதாரமாக அவர் சீனாவிலுள்ள மாகாணங்களில் எங்கெல்லாம் பாலின விகிதம் சமச்சீரின்றி உள்ளதோ அங்கெல்லாம் வன்முறை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார். பெண்களின் விகிதம் குறைவாக இருப்பதால் திருமண நடப்பதே உறுதியில்லாத நிலமையில் உள்ள குறைவான வருவாயைக் கொண்டுள்ள ஆண்களால் வன்முறை அதிகரிக்கிறது என்கிறார். இதனால் வன்முறைக்குக் காரணமாக இருப்பது பாலின விகிதாச்சாரக் குறைவேயன்றி வருமானக் குறைவு மட்டும் அல்ல என்கிறார். 



தற்போது வளர்ந்த நாடுகளிலுள்ள ஆண்கள் ஏழை நாடுகளிருந்து பெண்களை திருமணம் செய்திருப்பது அதிகரித்திருக்கிறது. இதனால் வியட்நாமில் மணப்பெண்களை, பெண்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகம் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு பெண்களுக்கான கிராக்கி ஏற்பட்டு அவர்களின் மதிப்பு கூடி இருப்பது அவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. பெண்களின் தேவை காரணமாக அவர்கள் கடத்தப்படுவது, விற்கப்படுவது, கட்டாயத் திருமணம், வேறு நாடுகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது, விருப்பமில்லாத திருமணத்தை ஏற்றுக்கொள்வது, விபச்சாரத்தில் தள்ளப்படுவது, பாலியல் அடிமைகளாக சிக்கிக் கொள்வது என்று அவர்களின் தலையிலேயே விடிகிறது.


 மாரா  எழுதுகிறார்,  "ஆண்களால்  நிறைந்த  இவ்வுலகில்  தைவா
ன்  முதல்  தென்கொரியா  ஹரியானா  வரையிலும்  பெண்துணை  கிடைக்காத  ஆண்களால்  பெண்கள்   மீதான  வன்முறையை  அதிகரிக்கவே  செய்யும்.    பெண்கள்  சகோதர உறவுடைய  ஆண்களை  மணந்து  கொள்ளும்  கலாச்சார நிலை வரும். பாலின ஒடுக்குமுறை (ஆணாதிக்கம்) காரணமாக பெண்களின் விகிதம் குறைந்திருக்கிறது என்று அமர்த்தியா சென் கூறுவதை மறுக்கும் மாரா பெண்கள் உரிமையின்றி வாழும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆண் பெண் விகிதம் ஓரளவு சமமாக இருப்பதைக் காட்டுகிறார். உலக அளவில் ஆண் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 101:100  என்ற அளவில் இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் நிறைந்த ஆசிய நாடுகளிலும் இந்தியா சீனாவிலும் ஏற்பட்டுள்ள இந்நிலை உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

தம்முடைய நோக்கம் கருக்கலைப்புக்கு எதிரான மதவாத, பழமைவாத அமைப்புகளின் நோக்கத்திலிருந்து வேறுபட்டது என்று தனது அரசியலை தெளிவுபடுத்தியிருந்தாலும் அதை முன்னெடுப்பதில் மாராவுக்கு சிக்கல் நிரம்பியிருக்கிறது. ஏனெனில் கருக்கலைப்பு என்பது பெண்ணின் உரிமை என்ற நிலையில் கருக்கலைப்பைத் தடை செய்யக் கோரவும் முடியாது. கருக்கலைப்பை தடை செய்யக்கோரினால் அது பெண்ணியத்திற்கு பல ஆண்டுகள் போராடிப் பெற்ற பெண்ணுரிமையை  இழக்கும் வகையில் ஒரு பெருமிழப்பாகும். இதற்காக பெண்குழந்தைகள் கருவில் சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் இயலாது என்ற நிலையில் மாரா அல்ட்ரா சவுண்ட் ஆய்வின் போது கருவின் பாலினத்தை அறியும் ஆய்வைத் தடை செய்யவும், அதற்காக தண்டனை விதிப்பதை நடைமுறைப் படுத்துவதையும், பெண் சிசுவைக்  கலைக்க விரும்பும் பெண்களிடம் முறையான காரணத்தை அறியவும் அதிக சிரத்தை எடுக்கவும் மருத்துவர்கள் முன்வரவேண்டும் என்பதையும் மட்டுமே செய்ய வேண்டுமென பரிந்துரைக்கிறார்.

நன்றி Times of India


Progressive என்ற இணைய வானொலிக்கு மாரா விஸ்டெண்டால் நேர்காணல்:



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment